டில்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற வளாக திறப்பு விழா வரும் 28ம் தேதி காலை நடக்கிறது. இந்த வளாகத்தை பிரதமர் மோடி திறக்கிறார். நாடாளுமன்ற வளாகத்தை இந்தியாவின் உயர் பதவியில் இருக்கும் ஜனாதிபதியைக்கொண்டு தான் திறக்க வேண்டும். அப்படி திறந்தால் தான் விழாவுக்கு வருவோம் என காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்பட 20 எதிர்க்கட்சிகள் அறிவித்து உள்ளன. அதே நேரத்தில் பிரதமர் தான் திறப்பு விழா செய்வார் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது.
எனவே எதிர்க்கட்சிகள் விழா புறக்கணிப்பில் உறுதியாக உள்ளன. இதனால் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மட்டுமே விழாவில் பங்கேற்கும் நிலை உள்ளது. இந்த நிலையில் இன்று தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஜெய்சுகீன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், நாடாளுமன்றத்தை ஜனாதிபதியைக்கொண்டு திறக்க வேண்டும் என மக்களவை செயலகத்துக்கு உத்தரவிட வேண்டும். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டு உள்ளது.