நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்கும். இந்த ஆண்டு சற்று தாமதமாக டிசம்பர் மாதம் தொடங்குகிறது. இன்று குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. டிசம்பர் 29-ந் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடக்கிறது. மொத்தம் 17 அமர்வுகள் நடைபெறும். இந்த தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள 16 மசோதாக்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. இதற்கிடையே, கூட்டத்தொடர் குறித்து விவாதிக்க மத்திய அரசு நேற்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. இரு அவைகளின் அரசியல் கட்சி குழு தலைவர்களுக்கு நாடாளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்தார். இந்த கூட்டத்தில், பிரதமர் மோடியும் கலந்து கொண்டார். தாக்கல் செய்யப்பட வேண்டிய மசோதாக்கள், விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதையொட்டி பிரதமர் மோடி இன்று அளித்த பேட்டி:
ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்று இருப்பது மிகப்பெரிய கவுரவம். இந்திய சுதந்திர தின 75ம்ஆண்டை கொண்டாடிய பின் நடைபெறும் கூட்டம். இது முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தொடர். சபை நடவடிக்கைகள் தடைபடும்போது முக்கிய பிரச்னைகள் குறித்து பேச வாய்ப்பு கிடைப்பதில்லை. இளைய உறுப்பினர்களுக்கு சபையில் அதிக வாய்ப்புஅளிக்க வேண்டும். சபையை அமைதியாக நடத்த அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்ப]ு அளிக்க வேண்டும். புதிதாக பொறுப்பேற்ற குடியரசு துணைத்தலைவர் மாநிலங்களவையை நடத்துவார். சர்வதேச சமூகத்திற்கு இந்தியாவிடம் இருந்து அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது.