நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 25ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தில் மணிப்பூர் மற்றும் அதானி பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் எதிர்க்கட்சிகள் போர்க்குரல் எழுப்பினர். இதனால் இரு அவைகளும் அன்றைய தினம் ஒத்திவைக்கப்பட்டது.
நேற்று அரசியல் அமைப்பு தினம் என்பதால் நாடாளுமன்ற கூட்டம் நடைபெறவில்லை. இன்று காலை வழக்கம் போல 11 மணிக்கு இரு அவைகளும் கூடியபோது, மீண்டும் எதிர்க்கட்சிகள் அதே பிரச்னைகளை கிளப்பின. இதனால் மாநிலங்களவையை 11.30 மணி வரைக்கும், மக்களவையை 12 மணி வரைக்கும் ஒத்தி வைத்தனர்.
11.30 மணிக்கு மீண்டும் கூட்டம் தொடங்கியதும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அதே கோரிக்கையை முன்வைத்தனர். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அமளி ஏற்பட்டதால் மாநிலங்களவையை நாள் முழுவதும் ஒத்தி வைப்பதாக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் அறிவித்தார்.