டில்லி நாடாளுமன்ற மக்களவையில் இன்று மதியம் 2 பேர் அத்துமீறி நுழைந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தின் போது அவர்கள் இருவரும் பாரத் மாத்தா கீ ஜே, சர்வாதிகாரத்தை நிறுத்து, மணிப்பூரில் வன்முறையை நிறுத்து, வந்தேமாதரம் என முழக்கமிட்டனர். இந்த சம்பவத்திற்கு பிறகு நாடாளு மன்றத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. டில்லி போலீஸ் கமிஷனர் சஞ்ய் அரோரா சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த சம்பவத்துக்கு அனைத்து கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்ததுடன், நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதுஎன குற்றம் சாட்டினர். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.உள்துறை செயலாளர் அஜய் பல்லாவும் அங்கு வந்து விசாரணை நடத்தினார்.
இதற்கிடையே மதியம் 2 மணிக்கு சபாநாயகர் ஓம்பிர்லா சபைக்கு வந்து கூட்டத்தை மீண்டும் தொடங்கினார். அப்போது உறுப்பினர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.