கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தில் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். உடனடியாக அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் எதிர் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தி எம்.பிக்களை காப்பாற்றினர். இந்த சம்பவத்தில் இந்திய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த 12 போலீசார் தங்கள் இன்னுயிர் ஈந்தனர்.
இந்த சம்பவத்தின் 22ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு காலையில் அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில் கூட்டம் தொடங்கியது. மதியம் 1.15 மணி அளவில் திடீரென மக்களவை பார்வையாளர் மாடத்தில் இருந்த குதித்த 2 பேர் கையில் செருப்புடன் சபாநாயகரை நோக்கி இந்தியில் கோஷமிட்டபடி ஓடிவந்தனர்.
அதில் ஒருவர் ஆண், இன்னொருவர் பெண். இருவருக்கும் சுமார் 25 வயது இருக்கும். அவர்கள் திடீரென காலணியில் இருந்து எடுத்து ஒரு குப்பியை வீசினர். அதில் இருந்து மஞ்சள் புகை வந்தது. திடீரென அவர்கள் எம்.பிக்கள் அமர்ந்துள்ள பெஞ்ச் மீது ஏறி ஓடினர். சில எம்.பிக்கள் மற்றும் சபை ஊழியர்கள் அவர்களை பிடிக்க முயன்றனர். பெரும்பாலானவர்கள் தப்பி ஓடினர்.
இன்று நாடாளுமன்ற தாக்குதல் தினம் என்பதால், இருவரும் தீவிரவாதிகளாக இருக்கலாம் என கருதினர். பின்னர் நாடாளுமன்ற பாதுகாவலர்கள் ஓடிவந்து அவர்களை பிடித்தனர். அவர்களை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்து. பிடிபட்ட இருவரும் கர்நாடக மாநிலம் மைசூர் தொகுதி பாஜக எம்.பி பிரதாப் சிங் பரிந்துரையின் பேரில் உள்ளே வந்து உள்ளனர். (நாடாளுமன்றத்துக்குள் பார்வையாளர்கள் வர வேண்டுமானால் எம்.பிக்கள் பரிந்துரைக்க வேண்டும்)
பிடிபட்ட ஆண் பெயர் அமோல் ஷிண்டே (25) என்றும், மகாராஷ்டிராவை சேர்ந்தவர் என்றும், பெண்ணின் பெயர் நீலம்(42).அரியானாவை சேர்ந்தவர் என்றும் தெரியவந்து உள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மக்களவையும், மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது. உள்ளே 2 பேர் வண்ணப்புகை வீசிய நேரத்தில் நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் 2பேர் வண்ணப்புகை வீசி உள்ளனர். அவர்களையும் போலீசார் பிடித்து விசாரிக்கிறார்கள். அவர்களில் ஒருவர் பெயர் சாகர் சர்மா என தெரியவந்து உள்ளது. இந்த சம்பவம் நடந்ததும் உடனடியாக நாடாளுமன்ற சாலையும் மூடப்பட்டது.
இந்த சம்பவம் நடந்தபோது பிரதமர் மோடி மக்களவையில் இல்லை. பின்னர் சரியாக 2 மணிக்கு மீண்டும் நாடாளுமன்றம் கூடியது. ஓம்பிர்லா இந்த சம்பவம் குறித்து விளக்கினார். அப்போது திமுக எம்.பி. டிஆர் பாலு நடந்த சம்பவத்திற்கு யார் காரணம் என கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது. பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் எம்.பிக்கள் வலியுறுத்தினர். இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என சபாநாயகர் கூறினார்.