Skip to content

கர்நாடகத்தில் முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு: நாடாளுமன்றத்தில் அமளி, அவை ஒத்திவைப்பு

கர்நாடகத்தில்   அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம்  அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த  விவகாரம்  இன்று நாடாளுமன்றத்திலும் எதிரோலித்தது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 9ம் நாளான இன்று காலை 11 மணிக்கு வழக்கம்போல் இரு அவைகளும் கூடின. சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியதும், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் பதாகைகளைக் காண்பித்து அமளியில் ஈடுபட்டனர்.

அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களை அமைதி காக்குமாறும், கேள்வி நேரம் தொடர அனுமதிக்குமாறும் ஓம் பிர்லா பலமுறை வேண்டுகோள் விடுத்தார். எனினும், அவரது வேண்டுகோளை ஏற்காத சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால், அவையை நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைப்பதாக ஓம் பிர்லா அறிவித்தார்.
மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் தலைமையில் இன்று அவை கூடியதும், “கர்நாடகாவில் அரசு ஒப்பந்தப் பணிகளுக்கு முஸ்லிம்களுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்கும் அம்மாநில காங்கிரஸ் அரசின் முடிவு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே விளக்கம் அளிக்க வேண்டும்” என பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான கிரண் ரிஜிஜு வலியுறுத்தினார்.

அவருக்கு ஆதரவாக, ஆளும் கூட்டணியைச் சேர்ந்த முன்வரிசை எம்பிக்கள் கோஷங்களை எழுப்பினர். கிரண் ரிஜிஜு கூறுகையில், “அரசியலமைப்புப் பதவியில் இருக்கும் மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர், முஸ்லிம் சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக இந்திய அரசியலமைப்பை அவர்கள் (காங்கிரஸ்) மாற்றப் போகிறார்கள் என்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையை நாங்கள் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.” என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ஜே.பி. நட்டா, மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படாது என்று அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

இதையடுத்துப் பேசிய ஜகதீப் தன்கர், “ஆனால், உங்களுக்கு என்ன வேண்டும்” என்று கேட்டார்.

அதற்கு நட்டா, “அத்தகைய சட்டங்கள் மற்றும் விதிகள் திரும்பப் பெறப்பட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு கார்கே பதிலளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

ர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின் கருத்துக்கு எதிராக பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பேசிய மல்லிகார்ஜுன் கார்கே, அரசியலமைப்பைப் பாதுகாக்க நாடு முழுவதும் இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்ட கட்சி காங்கிரஸ் என கூறினார்.

இரு தரப்பிலிருந்தும் கூச்சல் குழப்பம் அதிகரித்ததை அடுத்து, அவைத் தலைவர் தன்கர் பிற்பகல் 2 மணி வரை அவையை ஒத்திவைத்தார். இதுபோல மக்களவையிலும் அமளி ஏற்பட்டதால் மக்களவையும் 2 மணி வரை  ஒத்திவைக்கப்பட்டது.

 

 

error: Content is protected !!