உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. ஆம் 140 கோடி மக்களையும் ஒரு நாடாளுமன்றம் மூலம் பரிபாலனம் செய்யும் நாடு . அந்த நாடாளுமன்றத்தில் தான் கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தி இந்தியாவின் மாண்மை காத்தனர். இந்த புனித போரில் 9 பாதுகாப்பு வீரர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்தனர்.
இந்த சம்பவத்தின் 22ம் ஆண்டு தினம் 13.12.2023 அன்று காலை அனுசரிக்கப்பட்டது. இந்த புனிதபோரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியது. மதியம் 1.10 மணி இருக்கும் திடீரென மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் இருந்த ஒரு வாலிபரும், 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும் மத்திய அரசுக்கு எதிராக இந்தியில் கோஷமிட்டவாறு, கையில் காலணியுடன் சபாநாயகர் ஓம்பிர்லாவை நோக்கி ஓடிவந்தனர். அப்போது அவையில் பிரதமர் மோடி இல்லை.
திடீரென 2பேர் புகுந்ததால் இவரும் தீவிரவாதிகளாக இருக்கலாம் என எம்.பிக்கள் பயந்து ஓட்டம் பிடித்தனர். அவர்கள் வெளியே வந்து தகவல் தெரிவித்த பின்னர் தான் என்ன நடந்தது என தெரியவந்தது. பாதுகாப்பு ஊழியர்கள் அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் வண்ண புகை கக்கும் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினர். அந்த குப்பிகளில் இருந்து மஞ்சள் நிற புகை வெளியேறியது. இதைப்பார்த்த சில எம்.பிக்கள் ஓட்டம் பிடித்தனர். தீவிரவாதிகள் தான் உள்ளே புகுந்து விட்டனர் என பதறிய அவர்கள் வெளியே ஓடிவந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் சபைக்குள் வந்து புகை குண்டு வீசியவர்களை மடக்கி பிடித்தனர். அதே நேரத்தில் வெளியேயும் 2 பேர் அதே போல வண்ண புகையை கக்கும் குப்பிகளை வெடித்தனர். அவர்களையும் போலீசார் பிடித்து கைது செய்தனர். அவர்களது பெயர் விவரம்: அரியானாவை சேர்ந்த நீலம் கவுர்(42), மகாராஷ்டிராவை சேர்ந்த அமோல் ஷிண்டே. இவர்கள் 4 பேரிடமும் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இவர்கள் கடந்த 6 மாதமாக திட்டம் போட்டு இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக டில்லி புறநகர் பகுதியான குருகிராமில் இவர்கள் அடிக்கடி சந்தித்து பேசி உள்ளனர். சில மாதங்களுக்கு முன் இவர்கள் நாடாளுமன்றத்துக்குள் வந்து அங்குள்ள நடைமுறைகளை அறிந்து சென்நு உள்ளனர்.
தகவல் அறிந்ததும் அனைத்து உயர் போலீஸ் அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை மீண்டும் மக்களவை கூடியதும் எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது. அது குறித்து விவாதிக்க வேண்டும் என்றனர். இது தொடர்பாக எதிர்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகருக்கு நோட்டீஸ் கொடுத்தனர். அதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. இதனால் சபையில் அமளி ஏற்பட்டதால் பிற்பகல் 2 மணி வரை அவையை ஒத்திவைத்தார் சபாநாயகர்.
நாடாளுமன்ற பாதுகாப்பு பணியில் குறைபாடு மற்றும் அலட்சியம் இருந்ததால் அதற்கு காரணமாக இருந்த 7 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். நேற்று நடந்த சம்பவத்தை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இன்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆங்காங்கே கூடுதலாக கண்காணிப்பு காமிராக்களும் பொருத்தப்பட்டிருந்தது. மத்திய அரசின் எதேச்சதிகாரத்தை கண்டித்து, மக்களவை தாக்குதல் நடந்த தினத்தில் தாங்கள் எதையாவது செய்ய வேண்டும் என முடிவு செய்து இதற்காக மைசூரு பாஜக எம்.பி. பிரதாப் சிம்காவிடம் பாஸ் வாங்கி அதன் மூலம் மக்களவை உள்ளே வந்துள்ளனர். இதனால் பாஸ் வழங்கிய பிரதாப் சிம்காவிடமும் டில்லி போலீசார் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் இனி எம்.பிக்கள் இலவச பாஸ் வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவபும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.