18 மக்களவை தேர்தல் முடிந்து 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 543 எம்.பிக்களில் 73 பேர் பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் பாஜக 30, காங்கிரஸ் 14, திரிணாமுல் காங்கிரஸ் 11, சமாஜ்வாடி4, திமுக 3 ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சிகள் சார்பில் தலா 2 பெண்கள் என மொத்தம் 73 பெண் எம்.பிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் கடந்த மக்களவையில் 78 பெண்கள் இருந்தனர். இப்போது 5 பேர் குறைந்து விட்டனர்.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 29 வேட்பாளர்களில் 11 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை தகுதி நீக்கம் செய்யப்பட்ட மஹூவா மொய்த்ரா, சஜ்டா அஹ்மத், மலா ராய், ககோலி கோஷ், ஷர்மிளா சர்கார், ஜூன் மாலியா, ரச்சா பானர்ஜி, சடாப்தி ராய் உள்ளிட்ட 12 பேர் போட்டியிட்ட நிலையில் சுஜாதா மண்டல் மட்டும் 5,567 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி உள்ளார்.
தமிழகத்தில் கடந்த முறை 3 பெண் எம்.பிக்கள் தேர்வானார்கள். இப்போது 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தென்காசியில் இருந்து இப்போது டாக்டர் ராணி (திமுக) புதிதாக வெற்றி பெற்றுள்ளார்.