திருச்சி காஜாமலையில் உள்ள எஸ்.எஸ்.ஆர்.எம் ஹோட்டலில் இந்திய ஜனநாயகக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது. பெரம்பலூர் தொகுதி உறுப்பினரும், கட்சியின் நிறுவனத் தலைவருமான டாக்டர்.பாரிவேந்தர் தலைமை தாங்கினார்,கட்சியின் தலைவர் டாக்டர்.ரவிபச்சமுத்து முன்னிலை வகித்தார். பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயசீலன் மற்றும் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மண்டல, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியின் அனைத்து அணிகளை சார்ந்த பொறுப்பாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர்கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தற்கால அரசியல் சூழ்நிலைகள், வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பான கட்சியின் நிலைபாடு போன்ற முக்கிய கருத்துக்கள் ஆலோசிக்கபட்டன.
பின்னர் கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் எம்.பி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமர் ஆவார் .பாஜக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ,தென் சென்னை ஆகிய மூன்று தொகுதிகளை ஒதுக்குவதாக உறுதி அளித்துள்ளனர்.இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் திருச்சியில் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் மாநில மாநாடு நடத்தப்பட உள்ளது. மாநாடு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.மாநாட்டில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பாரிவேந்தர் மீண்டும் மக்களவை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.