புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பாடசாலை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி கடந்த 2-ந்தேதி மதியம் 2 மணியளவில் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறாள். அப்போது எதிர்பாரத விதமாக சிறுமி உயிரிதுந்தாள். இதனால் அவளது உடலை வீசிவிட்டு சென்று விட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த கருணாஸ்(19) என்ற இளைஞரும், விவேகானந்தன்(59) என்ற முதியவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலையில் சிறுமியின் உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டது. சிறுமியின் தந்தையை அழைத்து முதல்வர் ரெங்கசாமி பேச்சுவார்த்தை நடத்தி பெற்றோருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். ஆனாலும் சிறுமியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் மறுத்துவிட்டனர்.
இந்த நிலையில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதுவை மக்கள் தன்னெழுச்சியாக போராடி வருகிறார்கள். இதனால் புதுவை மாநிலம் முழுவதும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.புதுச்சேரி சம்பவத்துக்கு அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரி்வித்துள்ளன. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜராகமாட்டோம் என புதுவை மாநில வழக்கறிஞர்கள் அறிவித்தனர். குற்றவாளி்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தருவோம் என வழக்கறிஞர்கள் உறுதி அளித்தனர். இதை ஏற்று உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதித்தனர். அதைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.