மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் நேற்றைய தினம் ஆண்கள் வில்வித்தை இறுதிப்போட்டியில் போலந்து வீரர் லூகாஸ் சிசெக்கை 6-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர் ஹர்வீந்தர் சிங் வெற்றி பெற்றார். இதன் மூலம் பாரா ஒலிம்பிக் வில்வித்தையில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை ஹர்வீந்தர் சிங் படைத்துள்ளார். மேலும் ஹர்வீந்தர் சிங் பெற்றது 4வதுதங்கமாகும். அதேபோல் ஆண்கள் கிளப் எறிதல் எப். 51 (பதக்க சுற்று) போட்டியில் இந்திய வீரர் தரம்பிர் 34.92 மீட்டர் தூரம் வீசி தங்கப் பதக்கத்தை வென்றார். மற்றொரு இந்திய வீரர் பிரணவ் சூர்மா 34.59 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் 2024 பாரீஸ் பாரா ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 5 தங்கம், 9 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களை வென்றுள்ளது. அதோடு, பதக்கப்பட்டியலில் ஜப்பானை(21 பதக்கங்கள்) பின்னுக்கு தள்ளி இந்தியா 13 இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.