கரூர் மாநகரில் அமரவதி ஆற்றங்கரையில் பிரசிதிபெற்ற அபய பிரதான ரெங்கநாத சுவாமி திருக்கோவிலில் அமைந்துள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து நிகழ்ச்சி கடந்த 13ம் தேதி துவங்கியது. அதனை தொடர்ந்து ரெங்கநாதர் நாள்தோறும் ஒரு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்க வாசல் திறப்பு இன்று அதிகாலை 4.30 மணியளவில் நடந்தது. கோவிந்தா முழக்கத்துடன் திறக்கப்பட்ட சொர்க்க வாசல் வழியாக ரெங்கநாத சுவாமி எழுந்தருளினார். அதனை தொடர்ந்து கோவில் முன்புறமுள்ள மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இதனை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலையில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு மேலாக பராந்தக சோழன், வீரபாண்டியன் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட நீலமேகப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.
பழமை வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டன.
சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நீலமேகப் பெருமாள் உற்சவர், நம்மாழ்வார் திருமங்கையாழ்வார் ராமானுஜர் ஆகிய உற்சவர்களுடன் சொர்க்க வாசலை கடந்த பின்னர் திரளான பக்தர்கள் “கோவிந்தா கோவிந்தா” என்ற நாமம் முழங்க சொர்க்க வாசலை கடந்து வந்தனர்.
பின்னர் மண்டபத்தில் எழுந்தருளிய நீலமேகப் பெருமாள் உற்சவருக்கு பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு இன்று அதிகாலையே ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் சொர்க்க வாசலை கடந்து வந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
அதேபோல் குளித்தலை வைகநல்லூர் அக்ரஹாரம் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
அரியலூர் அருள்மிகு ஸ்ரீகோதண்டராமசாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்புவிழா நடைபெற்றது. முன்னதாக தசவதார மண்டபத்தில் பெருமாளுக்கு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் காலை 5.35 மணிக்கு உற்சவ பெருமாள் பரமபத வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோஷத்துடன் பரமபத வாசல் வழியாக சென்றனர். இதனைத்தொடர்ந்து கோவில் வளாகத்தினுள் பெருமாள் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் அரியலூர் நீதிமன்ற நீதிபதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள வைணவ ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் திறக்கப்பட்டு பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பெரம்பலூர் நகரம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு மரகதவல்லி தாயார் சமேத மதனகோபாலசுவாமி திருக்கோயில்.
பழமையான இத்தலத்தில் பஞ்ச பாண்டவர்கள் வழிபட்டு சென்றதால் , சகோதர்கள் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் ஸ்தலமாகவும், விளங்குகிறது. இத்திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவானது இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழாவில் நேற்று மூலவர் மற்றும் உற்சவ சுவாமிக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மோகினி அலங்காரத்தில் மதனகோபாலசுவாமி காட்சி அளித்தார்.
விழாவில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது.
அருள்மிகு மதனகோபல சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு , பூஜைகளுக்கு பிறகு பரம பத வாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்இந்நிகழ்வில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
.
.