பாரா ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு இன்று 2வது தங்கம் கிடைத்துள்ளது. 2023 மாற்றுத்திறனாளிகளுக்கான 4-ஆவது பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் ஹாங்சே நகரில் 5வது நாளான இன்று நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பில் 191 வீரர்கள், 112 வீராங்கனைகள் என மொத்தமாக 302 பேர் பங்கேற்றுள்ளனர். ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய ர்கள் பதக்கங்களை குவித்து சாதனை படைத்தது போல், பாரா ஆசிய விளையாட்டிலும் இந்தியர்கள் இதுவரை இல்லாத அளவிற்கு பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளனர்.
இதுவரை பாரா ஆசிய விளையாட்டில் 72 பதக்கங்கள் தான் அதிகபட்சமாக இந்தியா வென்றிருந்த நிலையில், தற்போது அதனை கடந்து சாதனை புரிந்துள்ளது. இந்த நிலையில், பாரா ஆசிய விளையாட்டில் 1,500 மீட்டர் ஒட்டப்பந்தியத்தில் இந்தியாவின் ராமன் சர்மா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஆடவருக்கான 1,500 மீட்டர் டி-38 ஒட்டப்பந்தியத்தில் 4:20.80 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து ராமன் சர்மா தங்கப் பதக்கம் வென்றார்.
இதற்கு முன், பாரா ஆசிய விளையாட்டில் இன்றைய நாள் தொடக்கத்தில் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் ஷீதல் தேவி தங்கப் பதக்கம் வென்றார். மகளிர் வில்வித்தை தனிநபர் பிரிவில் சிங்கப்பூரின் அலீம் நூர் என்பவரை வீழ்த்தி ஷீதல் தேவி தங்க பதக்கம் வென்று அசத்திருந்தார். இதையடுத்து, 1,500 மீட்டர் ஒட்டப்பந்தியத்தில் இந்தியாவின் ராமன் சர்மா தங்கப்பதக்கம் வென்ற நிலையில், இந்தியாவுக்கு இன்று 2-ஆவது தங்கம் கிடைத்துள்ளது.
மேலும், இன்று பாரா ஆசிய விளையாட்டில் பேட்மிண்டனில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் வெள்ளி பதக்கம் வென்றார். ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர்கள் பிரதீப் குமார் வெள்ளி மற்றும் அபிஷேக் சமோலி வெண்கலம் பதக்கம் வென்றனர். இதுபோன்று வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் லட்சுமி வெண்கலம் பதக்கம் வென்றார். எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் இதுவரை 21 தங்கம், 26 வெள்ளி, 43 வெண்கலம் என மொத்தம் 90 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப்பட்டியலில் 5 ம் இடத்தில் உள்ளது.