தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே உம்பளாபாடி கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து பயிருக்கு ட்ரோன் கருவி மூலம் “பல்ஸ் ஒன்டர்” ஊட்டச்சத்து உரம் தெளிக்கப்பட்டது. இக்கிராமத்தில் பரவலாக 30 ஏக்கர் அளவில் நெல்லுக்கு பின் உளுந்து சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது பூக்கும் தருணத்தில் உள்ள இப்பயிர்களில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மூலம் விநியோகிக்கப்படும் பல்ஸ் ஒன்டர் எனப்படும் நுண்ணூட்டச்சத்து உரம் 5 ஏக்கருக்கு ட்ரோன் கருவி மூலம் தெளிப்பு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விவசாயி ரகுபதி செய்திருந்தார். ஒரு ஏக்கருக்கு 10 லிட்டர் தண்ணீரில் பல்ஸ் ஒன்டர் இரண்டு கிலோ அளவு கலக்கப்பட்டு ட்ரோன் கருவி மூலம் தெளிக்கப்பட்டது. இவ்வாறு ஊட்டச்சத்து கலவை தெளிப்பதன் மூலம் ஒரே நேரத்தில் உளுந்தில் பூக்கள் பூத்து காய்கள் திரட்சியாக உருவாகும், அறுவடையும் ஒரே நேரத்தில் செய்ய இயலும். இவ்வாறு நுண்ணூட்டக் கலவை தெளிப்பு செய்ய இயலாத விவசாயிகள், ஒரு ஏக்கருக்கு இரண்டு கிலோ டி ஏ பி உரத்தினை 10 லிட்டர் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் தெளிந்த கரைசலை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து பேட்டரி தெளிப்பானால் மாலை வேலைகளில் பூக்கும் தருணத்தில் தெளிப்பதன் மூலம் அதிக மகசூல் எடுக்க இயலும்.டாஃப்பே நிறுவனத்தைச் சேர்ந்த ஆகாஷ் டிரோன் கருவி மூலம் தெளிப்பு செய்யப்பட்டது. டிரோன் கருவி முன்பதிவிற்கு விவசாயிகள் 7358112881 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விவசாயிகள் ரகுபதி,கணபதி, வேளாண்மை துணை அலுவலர் எபினேசர், உதவி அலுவலர்கள் பரணிகா, சுந்தரி ஆகியோர் செய்திருந்தனர்.