பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேசுவரர் ஆலயம் திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனித்தேரோட்டம் நடைபெறும். அதன்படி பங்குனித் திருவிழாவானது பெரிய கொடியேற்றத்துடன் கடந்த 2-ந் தேதி துவங்கியது. 6ம் திருநாளான இன்று காலை விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
முன்னதாக அலங்கரிக்கப்பட்ட இரண்டு பிரம்மாண்டமான திருத்தேரில் சுவாமியும்,அம்பாளும் ஒருதேரிலும், அகிலாண்டேஸ்வரி தாயார் ஒருதேரிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார், பின்னர் தென்னாடுடைய சிவனே போற்றி, ஓம் நமச்சிவாயா என கோஷமிட்டவாறு சிவனடியார்கள் முன்செல்ல திருத்தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். முதலாவதாக சுவாமியும், அம்பாளும் அருள்பாலித்த தேரை பக்தர்கள் இழுத்துவந்து நிலைக்கு வந்தபின்னர், அகிலாண்டேஸ்வரி தாயாரின் தேர் வடம்பிடித்து இழுத்துச்செல்லப்பட்டது. தேரானது 4 வீதிகளிலும் வலம்வந்து பின்னர் நிலையை வந்தடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு அம்பாளை தரிசித்தனர்.