புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகைக்கு சாராயம் உள்ளிட்ட மதுபானங்கள் கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து டிஎஸ்பி கென்னடி தலைமையிலான தனிப்படை போலீசார் மாவட்டம் முழுவதும் சோதனை சாவடிகள் அமைத்து கடத்தல்காரர்களை கண்காணித்து வந்தனர்.
அப்போது நாகை மாவட்டம் பெருங்கடம்பனூர் வளப்பாற்றில் மர்ம நபர்கள் இரவு நேரத்தில் நீந்தி வருவதை கண்டு போலீசார் உஷாரானார்கள். அப்போது 74 மூட்டைகளில் பாண்டி சாராயத்தை கயிறு கட்டி ஆற்றில் எடுத்து நீந்தி வந்தவர்களை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். போலீசாரை கண்ட கடத்தல்காரர்கள், சாராய மூட்டைகளை கரையில் போட்டுவிட்டு அங்கிருந்து மீண்டும் மறுகரைக்கு நீந்தி தப்பி சென்றனர். இதையடுத்து காரைக்காலில் இருந்து நாகைக்கு ஆற்றின் வழியாக நூதன முறையில் கடத்தி வரப்பட்ட 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆயிரம் லிட்டர் பாண்டி சாராயத்தை பறிமுதல் செய்த நாகை தனிப்படை போலீசார், கடத்தல்கார்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் இரண்டையும்
பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆயிரம் லிட்டர் சாராயத்தை பார்வையிட்ட நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் அதனை உடனடியாக அழிக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து பறிமுதல் செய்த சாராயத்தை இன்று பள்ளம் தோண்டி அதில் ஊற்றி அழித்தனர். சாராயத்தை நூதன முறையில் கடத்தி வந்தவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், காரைக்காலில் இருந்து மதுபான கடத்தலில் ஈடுபட்ட அண்டை மாநிலத்தவர்கள் ஆறு பேர் மீது இதுவரை குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளதாக எஸ் பி கூறினாா்.