தஞ்சையை சேர்ந்தவர் பந்தல் சிவா. இவர் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் மாநாடு, செல்வந்தர்களின் இல்ல மணவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பந்தல் அமைத்து கொடுப்பார். தமிழ்நாடு மட்டுமல்லாமல், பக்கத்து மாநிலங்களில் நடைபெறும் பெரிய விழாக்களுக்கும் பந்தல் அமைப்பார். இதனால் இவரை பந்தல் சிவா என்று அழைப்பார்கள். சினிமா செட்கள் போலவும், அரண்மனை போலவும் பந்தல் அமைத்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றவர்.
இவரது பந்தல் அமைப்புக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் தஞ்சை நாஞ்சிக்கோட்டையில் உள்ள
குடோனில் தான் வைத்திருப்பார். இங்கு பல கோடி மதிப்பிலான பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. நேற்று நள்ளிரவு திடீரென இந்த குடோனில் தீவிபத்து ஏற்பட்டது. கோடை காலம் என்பதால் தீ மளமளவென பற்றி எறிந்தது. உடனடியாக தஞ்சை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 2 வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
அதற்குள் அலங்கார பொருட்கள், பந்தல் உபகரணங்கள் பெரும்பகுதி எரிந்து போனது. சேதமதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.