தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே ரெகுநாதபுரத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி உள்ளது. இதில் 50 மாணவர்கள் படிக்கின்றனர். இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இப் பள்ளியில் இருந்த 2 ஒட்டு கட்டடங்களில், பழுதடைந்த கட்டடம் ஒன்றை இடித்து விட்டனர். மற்றொரு கட்டடத்தில் இரண்டு வகுப்பறை மட்டுமே இருப்பதால், வகுப்பில் உட்கார இடமின்றி மாணவர்கள் பள்ளி வராந்தாவில் உட்கார்ந்து படிக்கின்றனர். இது குறித்து அப் பகுதி பொது மக்கள் கூறுகையில் இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சாதாரண குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர்கள் தான். பழுதடைந்த ஒரு கட்டடத்தை இடித்து 6 மாதமாகிறது. பள்ளி வளாகத்தில் ஓடு வேய்ந்த கட்டடம் பயனின்றி உள்ளது. இடித்த கட்டடத்தை மீண்டும் கட்டும் வரை பள்ளி வளாகத்தில் உள்ள ஓடு வேய்ந்த கட்டடத்தை பழுதுப் பார்த்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பயன்பாட்டில் உள்ள ஒட்டு கட்டடமும் மழை நாட்களில் நீர் கசிகின்றது. பள்ளி காம்பவுண்ட் சுவரும் ஒரு பகுதி இடிந்து விட்டது. இதையும் கட்டித் தர வேண்டும். பள்ளி சமையலறை கூடமும் தரை தளம் சேதமடைந்துள்ளது. இதையும் சீரமைக்க வேண்டும் என்றனர்.