Skip to content
Home » பஞ்சாயத்து தேர்தல்… அரசியல் கட்சிகள் விலகி இருக்க வேண்டும்…. ஜனாதிபதி முர்மு பேச்சு

பஞ்சாயத்து தேர்தல்… அரசியல் கட்சிகள் விலகி இருக்க வேண்டும்…. ஜனாதிபதி முர்மு பேச்சு

  • by Authour

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை (ஏப்ரல் 24-ந்தேதி) முன்னிட்டு, சிறப்பாக செயல்பட்ட பஞ்சாயத்துகளுக்கு நேற்று டில்லியில் விருது வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று விருதுகளை வழங்கினார்.இதில் 9 பிரிவுகளின் கீழ் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதன்படி தமிழ்நாட்டில் கோவை மாவட்டம் மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் பிச்சனூர் ஊராட்சி “நல் ஆளுமை உள்ள கிராம ஊராட்சி” என்ற பிரிவில் தேசிய அளவில் முதல் இடத்தை பெற்றது.

இதற்கான விருதை ஊராட்சி செயலாளர் உமா மகேஸ்வரியிடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசும்போது ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியதாவது: 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பஞ்சாயத்து தேர்தல்கள் நடத்த வழிமுறை இருக்கிறது. அனைத்து சமூக அமைப்புகளும் இதில் பங்கேற்க முடியும். இருப்பினும் சில நேரங்களில் இந்த தேர்தல்கள் உள்ளூர் மக்களிடையே கசப்புணர்வை ஏற்படுத்துகின்றன. கிராமங்களில் சண்டை-சச்சரவுகளை உண்டாக்குகின்றன.  எனவே இவற்றை தவிர்க்க, இந்த பஞ்சாயத்து தேர்தல்களில் இருந்து அரசியல் கட்சிகள் விலகி இருக்க வேண்டும்.

பஞ்சாயத்து தேர்தல்கள் கட்சி சார்பற்றவை. இதில் வேட்பாளர்கள் எந்த அரசியல் கட்சியின் சின்னத்தையும் பயன்படுத்த மாட்டார்கள். குஜராத்தில் பஞ்சாயத்து தலைவரை போட்டியின்றி தேர்வு செய்யும் கிராமங்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. சம்ராஸ் கிராம் யோஜனா எனப்படும் இந்த திட்டத்தை கடந்த 2006-ம் ஆண்டு அப்போதைய முதல்-மந்திரி நரேந்திர மோடி அறிமுகம் செய்தார். அதன்படி மக்கள் பிரதிநிதிகளை ஒருமனதாக தேர்ந்தெடுத்த பஞ்சாயத்துகளுக்கு விருது வழங்கப்பட்டது. தேர்தலால் ஏற்பட்ட கசப்பால் கலங்கிய கிராமத்தில் அமைதி நிலவ வேண்டும் என்ற எண்ணமே இதற்கான காரணம் ஆகும்.

தற்போதைய நிலையில் பஞ்சாயத்து பிரதிநிதிகளில் 46 சதவீதத்தினர் பெண்கள் ஆவர். எனினும் பஞ்சாயத்துகளில் பெண்களின் பங்கேற்பு அதிகரிக்க வேண்டும். பஞ்சாயத்து பணிகளில் பெண்கள் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அவர்களது குடும்பத்தினரும் இந்த முயற்சிகளுக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறே.

இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஊரக வளர்ச்சித்துறை மந்திரி கிரிராஜ் சிங், மகாத்மா காந்தியின் கனவான தன்னிறைவு பெற்ற கிராமங்கள் என்ற இலக்கை நோக்கி அரசு உழைத்து வருவதாக தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *