Skip to content
Home » பானையுடன் மீண்டும் களம் காணும் திருமா…… சிதம்பரத்தில் ரிஸ்க் எடுக்கிறாரா?

பானையுடன் மீண்டும் களம் காணும் திருமா…… சிதம்பரத்தில் ரிஸ்க் எடுக்கிறாரா?

  • by Senthil

நாடாளுமன்ற  தோ்தல் அறிவிப்பு  இந்த மாத இறுதியிலோ, மார்ச்  முதல்வாரத்திலோ வெளியாகலாம். ஏப்ரலில் தமிழகத்தில் வாக்குப்பதிவு  உறுதி.  இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம்  செய்து முடித்து தயார் நிலையில்  உள்ளது.

தேர்தல் ஆணையமே  தயார் நிலையில் இருக்கும்போது, அரசியல் கட்சி தலைவர்கள் என்ன சளைத்தவர்களா?  அவர்களும், வா, வா எப்போது வந்தாலும் சந்திக்க தயார் என தேர்தலை எதிர்கொள்ள வேலைகளை தொடங்கி விட்டனர்.   தமிழகத்தை பொறுத்தவரை  திமுக கூட்டணியில் முதல்சுற்று பேச்சுவார்த்தையும் முடிந்து விட்டது.

எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதி என்பது வரை உறுதி செய்யப்பட்டு உள்ளது.  சில கட்சிகள் வேட்பாளர் பட்டியலையும் தயார் செய்து வைத்து விட்டது.  அந்த வகையில்  தமிழகத்தில் உறுதியாக சொல்வது என்றால்,  சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியை சொல்லலாம். திமுக கூட்டணியில் இங்கு  விசிக தலைவர்  தொல். திருமாவளவன் தான்  வேட்பாளர் என்பது  ஏறத்தாழ தொகுதி மக்கள் அனைவரும் பேசும் பேச்சாக இருக்கிறது.அது 100% உறுதியாகவும் இருக்கலாம். இதற்கு முதல் காரணம் திருமாவளவனின் சொந்த ஊரான அங்கனூர் இந்த  மக்களவை தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் சட்டமன்ற தொகுதியில் தான் உள்ளது.

இனி சிதம்பரம்(தனி) நாடாளுமன்ற தொகுதியின் அமைப்பை பார்ப்போம். இந்த தொகுதி  கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் பரந்து விரிந்து கிடக்கிறது.  கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளும், அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் ஜெயங்கொண்டம் ஆகிய இரு  சட்டமன்ற தொகுதிளும், பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் சட்டமன்ற தொகுதியும் உள்ளது.

உலகப் புகழ் பெற்ற ஸ்ரீநடராஜர் ஆனந்த தாண்டவ மூர்த்தியாக குடி கொண்டிருக்கும் தில்லை நடராஜர் கோவில், இமயம் சென்று வெற்றிகளை குவித்த ராஜேந்திரசோழன் கட்டுவித்த கங்கை கொண்ட சோழபுரம் பெருவுடையார் கோவில், தமிழுக்கு அகராதி தந்த வீரமாமுனிவர் கட்டிய ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா ஆலயம்,

திருமண தடைநீக்கும், தேவார மூவராலும் பாடல்பெற்ற திருமழபாடி வைத்தியநாதஸ்வாமி திருக்கோவில், ராகவேந்தர் அவதரித்த புவனகிரி, சுரபுன்னை தாவரங்களே காடுகள் போல வளர்ந்து அதனுள்ளே படகு சவாரி செய்யும் வகையில் பிச்சாவரம்  அலையாத்தி் காடுகள் என பல  ஆலயங்களும், சுற்றுலா தலங்களும் நிறைந்தது இந்த தொகுதி. பிரசித்தி பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழகமும் இந்த தொகுதியில் தான் உள்ளது.

இங்குள்ள மக்களுக்கான வேலைவாய்ப்புகள் என்னவென்று பார்த்தால், சிமெண்ட் தொழிற்சாலைகளையும், தனியார் கரும்பாலையையும் தவிர வேறு பிரதான தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. விவசாயத்தையே முழுவதும் நம்பியுள்ள விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களை கொண்ட தொகுதி. நெல், கரும்பு, முந்திரி, சோளம், பருத்தி, மிளகாய் பயிர்கள் அதிக அளவில்  இங்கு சாகுபடி செய்யப்படுகிறது.

1952ம் வருடத்தேர்தல் முதல்  இதுவரை நடைபெற்றுள்ள 17 தேர்தல்களில் இதுவரை காங்கிரஸ் கட்சி ஆறுமுறையும், திமுக நான்கு முறையும், பாமக மூன்று முறையும், அதிமுக இரண்டு முறையும், விசிக கட்சி இருமுறையும்  சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன.

.

 

2009  தேர்தலில்  இந்த தொகுதியில் வெற்றி பெற்ற  தொல் திருமாவளவன் முதன் முறையாக நாடாளுமன்றத்தில் காலடி பதித்தார். 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இரண்டாம் முறையாக வெற்றிபெற்ற போதிலும் அவர் 2,969  வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு தி்முக கூட்டணி  வேட்பாளர்கள் 4 லட்சம், 5 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை அறுவடை செய்தபோதிலும் திருமாவளவன் மிக குறைந்த வாக்கு வித்தி்யாசத்தில் தான் வெற்றிபெற முடிந்தது. இதனால் நள்ளிரவு வரை சிதம்பரம் தொகுதி ரிசல்ட் எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே இருந்தது.

இதற்கு காரணம் திருமாவளவன் இந்த தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டார்.  தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு தான் இவர் சின்னத்தை  தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து பெற்றார்.  பானை  சின்னம் பரீட்சயம் இல்லாததால்   வெற்றிக்கு அவா் போராட வேண்டி இருந்தது.  அதே நேரத்தில் விழுப்புரத்தில்  விசிக வேட்பாளர்  ரவிக்குமார் 1 லட்சத்து 28 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் இப்போதும் பானை சின்னத்தில் தான்  போட்டியிடுவேன்.  ஒதுக்கப்படும் அனைத்து தொகுதிகளிலும் பானை தான் சின்னம் என அறிவித்து விட்டார். பானை மூலம் திருமாவளவன் ரிஸ்க் எடுக்கிறார் என்ற கருத்தும்  தொண்டர்கள் மத்தியில் உள்ளது.

சிதம்பரம்நாடாளுமன்ற தொகுதியின் தற்போதைய வாக்காளர் விவரம் இதோ:

ஆண் வாக்காளர்கள் – 7,49,623பேரும்,  பெண் வாக்காளர்கள்-7,61,206பேரும்,இதர வாக்காளர்கள் 86 பேர் என மொத்தம் 15 லட்சத்து, 10 ஆயிரத்து 915 வாக்காளர்கள் உள்ளனர்.
சாதி வாரியாக பார்த்தால் வன்னியர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் சமஅளவில் வசிக்கும் தொகுதி சிதம்பரம். இதற்கு அடுத்தபடியாக  மூப்பனார், உடையார், முதலியார் ஆகியோர்  கணிசமாக உள்ளனர்.
கட்சிஅளவில் திமுக மற்றும் அதிமுக ஆகியவை சமபலத்துடனும், பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆகிய இருகட்சிகளும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் கட்சிகளாகவும், நாம் தமிழர் கட்சி, தேமுதிக, மதிமுக, பாஜக, ஐஜேகே ஆகிய ஜந்து கட்சிகளுக்கும் கணிசமான அளவு வாக்குவங்கியை கொண்டுள்ளன.

2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், சிதம்பரம் கே.எ.பாண்டியன், புவனகிரி ஆ.அருண்மொழிதேவன்ஆகிய இரண்டு தொகுதிளை அதிமுகவும், காட்டுமன்னார்கோவில் (தனி) சிந்தனைச்செல்வன் விசிகவும், அரியலூர் சின்னப்பா மதிமுகவும், ஜெயங்கொண்டம் கண்ணன் மற்றும் குன்னம் சிவசங்கர் ஆகிய இரு தொகுதிகளை திமுகவும் கைவசம் வைத்துள்ளது. 6 தொகுதிகளில் 4 தொகுதிகள் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வசமே உள்ளது.

தற்போதைய தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்குமுனைப்போட்டி நிலவும் சூழ்நிலை உள்ளது.

அதிமுகவில் தற்போது கூட்டணி கட்சிகள் முடிவாகாவிட்டாலும் இத்தொகுதியில் அதிமுகவே களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களாக முன்னாள் எம்பி சந்திரகாசி அல்லது கடந்த தேர்தலில் போட்டியிட்டு தொல்.திருமாவளவனிடம்  குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த   அரியலூர் மாவட்ட கவுன்சில் தலைவர் சந்திரசேகர் ஆகிய இருவரில் ஒருவர்  களம் இறக்கப்படலாம்.

கடலூர் மாவட்டத்திலும் 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளதால் அந்த மாவட்ட  அதிமுகவில் உள்ள முன்னாள் எம்எல்ஏ முருகுமாறன்  அல்லது  கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் புவனகிரி எம் ல்ஏவுமான அருண்மொழிதேவன் சிபாரிசில் யாராவது வந்தால்   அதில் ஒருவர் பட்டியலில் இடம் பெற வாய்ப்பு  உண்டு.

பாமக தனித்து நின்றாலும், அல்லது பாஜக கூட்டணியில் இடம் பெற்றாலும் இத்தொகுதியை கேட்டு பெறும்.பாமகவின் தொகுதி பட்டியலில் சிதம்பரம் எப்போதும் இருப்பது போல இப்போதும் இருக்கிறது. பாமக இத்தொகுதியில் வடிவேல் இராவணனை வேட்பாளராக  நிறுத்த தயாராக இருக்கிறது.

பாஜக இத்தொகுதியில் போட்டியிட்டால் அக்கட்சி வேட்பாளராக பட்டியலணி மாநிலத்தலைவர் தடா.பெரியசாமி களம் காணலாம்.

சிதம்பரம் தொகுதியை பொறுத்தவரை 1952 1957 1962 ஆகிய மூன்று தொடர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. இதேபோன்று இரண்டாம் முறையாக 1984 1989 1991 ஆகிய மூன்று முறை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வள்ளல் பெருமான் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தார். மேலும் பாமக கட்சி 1998 1999 2004 ஆகிய மூன்று தொடர் தேர்தல்களிலும் வெற்றி பெற்று இத்தகுதிகள் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.
தற்போது  விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த  தொல் திருமாவளவன் 2009 மற்றும் 2019 ஆகிய இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார் மீண்டும் சிதம்பரத்தில்  களம் காண ஆயத்தமாகி வருகிறார்.   திமுக ஆளுங்கட்சியாக உள்ளதாலும்,  சமீபத்தில்  திருச்சியில் விசிக நடத்திய மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றதாலும்  இந்த முறை திருமாவளவன்  அதிக வாக்கு வித்தியாசத்தி்ல் வெற்றி பெறுவது உறுதி என விசிக தொண்டர்கள்  அடித்து சொல்கிறார்கள்.  தேர்தல் அறிவிப்பே இன்னும் வராவிட்டாலும்  தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளுமே இறங்கிவிட்டது. அதை   சிதம்பரம் தொகுதியின் ஒவ்வொரு பகுதியிலும் பார்க்க முடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!