உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நீர்வழித் திட்டங்களை செயல்படுத்த நடப்பு பட்ஜெட்டில் திட்டங்களை அறிவிக்காத தமிழக அரசை கண்டித்தும், வேளாண் பட்ஜெட்டில் நெல் 1 குவின்டாலுக்கு 2500, கரும்பு டன்னுக்கு 4000 ரூபாய் வழங்காமல் ஏமாற்றிய தமிழக அரசை கண்டித்தும், இன்று திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை பகுதியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்
பல்வேறு விவசாய சங்கங்கள் உள்ளிட்ட விவசாயிகள் 200 -க்கும் மேற்பட்டோர் உடலில் நாமமிட்டு, மண்சட்டிகளை ஏந்தியபடி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
உலக தண்ணீர் தினம் என்பது தண்ணீரை சேமிப்பது, தண்ணீரை விரயம் செய்யாமல் பாதுகாப்பது நோக்கமாகும். ஆனால் இந்த வருடம் மட்டும் தமிழகத்தில் காவிரியில் 500 டிஎம்சி தண்ணீர் உபரிநீராக கடலில் கலந்தது. இதேபோல கோதாபுரி ஆற்றில் 500 டிஎம்சி தண்ணீரும், கிருஷ்ணா நதியில் 2000 டிஎம்சி தண்ணீரும் வெள்ளமாக கடலில் கலந்து வீணாகி வருகிறது. இந்நிலையில் வருங்கால சந்ததியினரை பாதுகாக்க நதிநீர் இணைப்பு அவசியம் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் தங்கள் உடலில் பட்டை நாமம் போட்டும், மண் சட்டியை கையில் ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.