தஞ்சை மாநகராட்சி 1வது வார்டு பள்ளியக்ரகாரம். இங்குள்ள பெரிய ஆதிதிராவிடர் தெருவில் மாநகராட்சி சார்பில் பொது கழிவறைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தெருவில் தேவாலயம், காளியம்மன் கோவில் உள்ளது.
மேற்கண்ட கோவில்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும்போது இந்த காலிமனை பக்தர்களுக்கு வசதியாக இருந்து வருகிறது. அந்த இடத்தில் கழிவறை கட்டுவதை பெரிய ஆதிதிராவிட தெரு மக்கள் விரும்பவில்லை. சற்று தொலைவில் ஏற்கனவே உள்ள கழிவறையை சீரமைத்து கொடுத்தால் போதுமானது என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் அதை ஏற்காமல் பொிய ஆதிதிராவிடர் தெருவில் தான் கழிவறை கட்டுவோம் என உறுதியாக கூறினர். அந்த பணியை தொடங்க அதிகாரிகள் வந்தபோது பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திரும்பி போய்விட்டனர்.
அந்த இடத்தில் கழிவறை கட்டக்கூடாது என ஏற்கனவே மாநகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர். இந்த நிலையில் இன்று காலை பெரிய ஆதிதிராவிடர் தெரு மக்கள் சுமார் 50 பேர் தஞ்சை கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
பெரிய ஆதி திராவிடர் தெருவில் கழிவறை கட்டுவதை அந்த பகுதி மக்கள் முற்றிலும் எதிர்க்கிறோம், எனவே வேறு இடத்தில் கட்டுங்கள் என அதில் கூறி உள்ளனர்.