பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். பல்லடத்தில் நடைபெறும் “என் மண் என் மக்கள்” யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறார். பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தை பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டமாகவே நடத்துகின்றனர். இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்களை திரட்டுகிறார்கள். இதற்கிடையில் பா. ஜனதா கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளின் தலைவர்களையும் இந்த மேடையில் அமர வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பா.ஜனதாவுடன் கூட்டணி பேசி வரும் ஓ.பன்னீர்செல்வம் , அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதுபற்றி கட்சி வட்டாரத்தில் இரு விதமான தகவல்கள் பரவி வருகிறது. அதாவது பா.ஜனதா டெல்லி தலைவர்கள் இன்னும் அ.தி.மு.க. உறவுக்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணி இல்லை என்பது 100 சதவீதம் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு நாம் கூட்டணியை உறுதிப்படுத்தலாம் என்று இருவரும் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
அத்துடன் தங்களுக்கு தலா ஒரு தொகுதி போதாது.. குறைந்தபட்சம் இரண்டு தொகுதி வேண்டும் என்று வற்புறுத்துவதாகவும் ‘சீட்’ உறுதியான பிறகு செல்லலாம் என்றும் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மோடியை வரவேற்க விமான நிலையத்துக்கு செல்லலாம் என்று கூறப்படுகிறது. பா.ஜனதா-த.மா.கா. கூட்டணி உறுதியாகி இருப்பதால் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொள்கிறார். அதே போல் ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், தேவநாதன், தமிழருவி மணியன் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.