Skip to content
Home » பல்லடம் 4பேர் கொலை குற்றவாளி கால் முறிவு… முக்கிய குற்றவாளி சிக்கினான்?

பல்லடம் 4பேர் கொலை குற்றவாளி கால் முறிவு… முக்கிய குற்றவாளி சிக்கினான்?

  • by Senthil

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு குறை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47). பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார். இவருடைய சித்தப்பா மகன் மோகன்ராஜ் (45). இவர்கள் கள்ளக்கிணறு பகுதியில் அடுத்தடுத்து உள்ள வீடுகளில் வசித்து வந்தனர்.

நேற்று முன் தினம் இரவு 7 மணிக்கு வீட்டில் செந்தில்குமார் தனியாக இருந்தார். அப்போது திடீரென 3 பேர் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். அவா்கள் திடீரென்று செந்தில்குமாரை சரமாரியாக வெட்டினர்.  சத்தம் கேட்டு பதற்றத்துடன் மோகன்ராஜ் அங்கு ஓடிவந்தார். அப்போது கொலையாளிகள்  மோகன்ராஜையும் கொடூரமாக வெட்டினர். இதனால் மோகன்ராஜும் அவர்களிடம் இருந்து தப்பிக்க கூக்குரல் எழுப்பியவாறு தப்பிக்க முயன்றார். ஆனால் அவர்கள் அவரையும் வெட்டி சாய்த்தனர்.

இதற்கிடையில் மோகன்ராஜின் அலறல் சத்தம் கேட்டு அவருடைய தாயார் புஷ்பவதி, புஷ்பவதியின் அக்காள் ரத்தினாம்பாள் ஆகியோரும் அங்கு வந்தனர். கொலைவெறி அடங்காத அவர்கள் பெண்கள் என்றும் பாராமல் அவர்களையும் வெட்டினர். இதனால் அவர்களும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். பின்னர் 3 பேரும் தப்பி சென்றுவிட்டனர். இவை அனைத்தும் சிறிது நேரத்தில் நடந்து விட்டது. கொலையில் ஈடுபட்டவர்கள் வெறி கொண்டு வெட்டி வீழ்த்தியதால் அந்த தெரு முழுவதும் கொலை செய்யப்பட்டவர்களின் கை, கால்கள் மற்றும் உடற்பாகங்கள் சிதறிக்கிடந்தன. எனவே கை, கால்களை வெட்டி வீசி இருக்கலாம் என்று தெரிகிறது.

தெரு முழுவதும் ரத்தம் சிதறிக் கிடந்தது. இந்த கொடூர கொலை குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் மற்றும் பல்லடம் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கு கொலையாகி கிடந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் கொலையானவர்களின் உறவினர்கள் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலையாளிகளை கைது செய்த பிறகுதான் உடல்களை எடுக்க அனுமதிப்போம் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இன்னும் அவர்கள் சடலத்தை வாங்கவில்லை.

இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய  செல்லமுத்து என்பவர் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் செல்லமுத்து கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கொலைக்கு பயன்படுத்திய கத்தியை ஒரு இடத்தில்  மறைத்து வைத்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுக்க செல்லமுத்துவை போலீசார் அழைத்து சென்றனர். அப்போது அவர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். அப்போது அவரது கால் எலும்பில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதற்கிடையே இந்த கொலையில் முக்கிய குற்றவாளியான வெங்கடேசன் என்பவரை நெல்லையில் போலீசார்  சுற்றி வளைத்து விட்டதாக தெரிகிறது. எனவே அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என போலீஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!