Skip to content
Home » 4பேர் கொலை…. தப்ப முயன்ற முக்கிய குற்றவாளி மீது போலீஸ் துப்பாக்கி சூடு

4பேர் கொலை…. தப்ப முயன்ற முக்கிய குற்றவாளி மீது போலீஸ் துப்பாக்கி சூடு

  • by Senthil

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள  கள்ளகிணறு குறைத்தோட்டம் பகுதியை சேர்ந்த  மோகன்ராஜ் (வயது 49). சம்பவத்தன்று இவருடைய வீட்டிற்கு வரும் வழியில் அமர்ந்து மதுக்குடித்துக்கொண்டிருந்த நெல்லை மாவட்டம் அரியநாயகிபுரத்தை சேர்ந்த அய்யப்பன் மகன் வெங்கடேஷ், திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த சின்னச்சாமி மகன் செல்லமுத்து (24), தேனி மாவட்டம் உத்தமபாளையம் முத்தாலபுரம் பகுதியை சேர்ந்த வனராஜ் மகன் விஷால் என்கிற சோனை முத்தையா(20) ஆகிய 3 பேரையும் கண்டித்தார்.

அப்போது ஏற்பட்ட தகராறில் மோகன்ராஜை அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் 3 பேரும் சேர்ந்து வெட்டிக்கொன்றனர். இதை தடுக்க வந்த மோகன்ராஜின் தாயார் புஷ்பவதி, சித்தி ரத்தினம்மாள், பெரியப்பா மகன் செந்தில்குமாரையும் துண்டு துண்டாக வெட்டி கொன்று விட்டு தப்பிச்சென்றனர். இந்த கொலை தமிழ்நாட்டை உலுக்கியது.

இந்த கொலை பற்றிய தகவல் கிடைத்ததும் கோவை மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க ஐ.ஜி மற்றும் டி.ஐ.ஜி.சரவணசுந்தர் ஆகியோர் மேற்பார்வையில் திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் நெல்லை, திருச்சி, தேனி ஆகிய பகுதிகளுக்கு சென்று கொலையாளிகளை தேடி வந்தனர். இதில் திருச்சியை சேர்ந்த செல்லமுத்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் போலீசார் தேடிய வெங்கடேஷ் என்கிற ராஜ்குமார், விஷால் என்கிற சோனை முத்தையா ஆகிய 2 பேரும் நேற்று திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் மாவட்ட காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து பலத்த பாதுகாப்புடன் விசாரணை செய்தனர்.

முக்கிய குற்றவாளியான அரியநாயகிபுரத்தை  சேர்ந்த வெங்கடேஷுக்கு 2 கால்களும் முறிந்துள்ளது. இதையடுத்து அவர் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த இடத்திற்கு வெங்கடேஷை போலீசார் அழைத்துச் சென்றபோது, போலீசார் மீது மண்ணைத் தூவி தப்பிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் போலீசார் வெங்கடேஷ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது நான்கு குண்டுகளில் இரண்டு குண்டுகள் காலில் பாய்ந்தது. இதில் இரண்டு கால்களும் முறிந்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!