அரியலூர் அருகே உள்ள வாரணவாசி கிராமத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி பாரம்பரிய அரிசியான பூங்கார் அரிசியை முதல் நாள் இரவே மழை நீரில் மண்பானையில் வேகவைத்து பின்னர் கஞ்சி வடித்து ஆறவைத்த சோற்றில் ஆறிய கஞ்சி தண்ணீரை ஊற்றி சிறிது வெண்ணெய் நீக்கிய நாட்டு மாட்டுப் பாலை காய்ச்சி உறை ஊற்றி மோர் தயாரித்து அதனை கஞ்சி நீர் கலந்த பூங்கார் அரிசியில் சமைத்த சோற்றுடன் கலந்து ஊறவைத்து காலையில் தேவையான அளவு மோர் கலந்து தயாரிப்பதுவே பழையசோறு . இந்த பழைய சோறு வயிற்றுப்புண்ணை ஆற்றும். நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய் வராமல் தடுக்கும், பெண்களுக்கான கருப்பை நோய் குழந்தைப்பேரின்மை, சுகப்பிரசவம் முதலியவற்றிற்கு உதவும்.
மேலும் செல்போனிலும் கணினி எனப்படும் கம்ப்யூட்டரில் தொடர்ந்து அதிக நேரம் பணிபுரிவதால் ஏற்படும் உடற்சூட்டைத் தணிக்கவல்லது ரத்தசோகையை நீக்கி புதிய ரத்தத்தை உற்பத்தி செய்யும் ஆற்றலும் பாரம்பரிய அரிசி ரகங்களுக்கு உண்டு என நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது. பழையசோறுடன் நாட்டு சின்ன வெங்காயம், பிரண்டை இஞ்சி கொத்தமல்லி புளி வைத்து அம்மியில் அரைத்த துவையல் நார்த்தங்காய்
ஊறுகாயும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் கலந்து கொண்டு பழையசோற்றினை தயாரிக்கும் முறைகளை விளக்கினார். இந்நிகழ்ச்சியில் மருத்துவர் சுமதி இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கொள்கையில் இயங்கும் செயற்பாட்டாளர்களுக்கு நம்ம ஊர் நம்மாழ்வாருக்கு நம்மாழ்வார் உருவப்படம் பொறித்த துணிப்பை வழங்கினார். மேலும் நிகழ்ச்சியில்தமிழ்க்களம் இளவரசன், ஆசிரியை செங்கொடி, எழுத்தாளர் சோபனா உள்ளிட்ட பள்ளி மாணவ மாணவிகள் பலரும் பங்கேற்று இயற்கை உணவின் சிறப்பை பற்றி எடுத்துரைத்தனர்.