பழனியில் இன்று அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்கியது. 2 நாள் இந்த மாநாடு நடக்கிறது. மாநாட்டை ஒட்டி 100 அடி உயர கம்பத்தில் கொடியேற்றிவைக்கப்பட்டது. அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சேகர்பாபு, சக்கரபாணி உள்ளிட்டோர் கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். முன்னதாக முத்தமிழ் முருகன் மாநாட்டு நுழைவாயிலை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்.
மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அவர் ஆற்றிய உரையில் தெரிவித்ததாவது; “”சேகர்பாபு அமைச்சரான பிறகு அறநிலையத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பக்தர்கள் உட்பட அனைவரும் விரும்பும் ஆட்சியை தி.மு.க. வழங்கி வருகிறது. முருகன் கோவில்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கி, பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்படுகின்றன. பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரத்திற்கு பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
அறுபடை ஆன்மிக சுற்றுப்பயணத்துக்கு 813 பேர் அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். கட்டணம் இன்றி முடி காணிக்கை செலுத்தும் திட்டமும் நடைமுறையில் உள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை இருக்கும். நம்பிக்கைகளுக்கு திராவிட மாடல் அரசு தடையாக இருக்காது.
திடீரென மாநாடு நடத்தவில்லை. பல திருப்பணிகளை செய்த பிறகே பழனி மாநாடு நடைபெறுகிறது. கோவில் வளர்ச்சிக்கும், அதில் பணியாற்றுபவர்களின் முன்னேற்றத்திற்கும் திராவிட மாடல் அரசு துணையாக உள்ளது. கோவில்களில் தினக்கூலி தொழிலாளர்களாக இருந்தவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது.
திமுக அரசின் சாதனைகளுக்கு மகுடமாக பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறுகிறது. ஆலய வழிபாடுகளில் தமிழ் மொழி முதன்மை பெற வேண்டும். கோவில் கருவறைக்குள் மனிதர்களுக்கிடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவ வேண்டும். அன்பால் உயிர்கள் ஒன்றாகும். அறத்தால் உலகம் நன்றாகும்.” இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டையொட்டி பழனி கோவில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. மாநாடு நடைபெறும் கல்லூரி வளாகமும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.