பழனி முருகன் கோயிலில் விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்றான பங்குனி உத்திர திருவிழா கடந்த 29 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்துநாள் திருவிழாவாக நடைபெற்றுவருகிறது. பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழச்சியான முருகன்- வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்ச்சி நாளை 3 ம் தேதி மாலையும், பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் 4 ம் தேதியும் நடைபெற உள்ளது. பங்குனி உத்திர திருவிழாவில் கலந்து கொள்ள பக்தர்கள் பழனிக்கு காவடி எடுத்து கூட்டம் கூட்டமாக வண்ணம் உள்ளனர். பக்தர்கள் மலை அடிவாரத்தில் தங்கி பஞ்சாமிர்தம் தயாரித்து முருகனுக்கு அபிஷேகம் செய்து தங்கள் ஊர்களுக்கு எடுத்து செல்வது வழக்கம். பஞ்சாமிர்தம் தயாரிக்க முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படும்
மலைவாழைப்பழம் சுமார் இருபத்துஐந்து லட்சம் பழங்கள் 500 டன் அளவிற்க்கு மலை அடிவாரத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. குடகு, ஆடலூர், பன்றிமலை, சிறுமலை, கொடைக்கானல் உள்ளிட்ட பல இடங்களில் மலைவாழைப்பழங்கள் பழனிக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், வாழைபழத்தின் தரத்தை பொருத்து ஒரு பழம் ரூ 6 முதல் 11 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டை விட விலை சற்று கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாகவும், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் காட்டுத்தீ பரவி வாழை மரங்கள் சேதம் அடைந்ததால் வரத்து குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். பக்தர்கள் அதிக அளவில் பழனிக்கு வரத்துங்கியுள்ளதால் இரண்டு தினங்களில் அனைத்து பழங்களும் விற்பனைஆகிவிடும் எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.