திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ளது அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில். அறுபடை வீடுகளில் இது மூன்றாம் படை வீடு. தமிழ்நாடு மட்டுமல்லாமல், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் இங்கு தினந்தோறும் வருகிறார்கள். மலைமீது உள்ள முருகனை தரிசிக்க ரோப் கார் வசதியும் இங்கு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் வருகை அதிகரித்தது போல மலை அடிவாரத்திலும், கிரிவலபாதையிலும், சன்னதி வீதியிலும் ஏராளமான சாலையோர கடைகள் பெருகின. அத்துடன் தள்ளுவண்டி கடைகளும் புற்றீசல் போல பெருகியது. இந்த கடைகளால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. அவற்றை அகற்ற வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளையில் திருத்தொண்டர் சபை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழு அமைக்கப்பட்ட மேற்கண்ட பகுதிகளில் ஆய்வு நடத்தி, சாலையோர கடைகள், தள்ளுவண்டி கடைகளை அகற்ற உத்தரவிட்டது. இதனால் அந்த வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
தங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரவேண்டும் என வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நாளையும், நாளை மறுதினமும் பழனி கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடக்கிறது.
மாநாடு நடைபெறும் 2 நாட்களும் பழனி அடிவாரம், கிரிவலபாதை, சன்னதிவீதி மற்றும் அந்த பகுதியில் உள்ள கடைகள் அனைதையும் அடைத்து வீடுகளில் கருப்புகொடி ஏற்ற வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதை கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
முருகன் மாநாட்டுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.