திருச்சி மாநகராட்சி 40வது வார்டுக்கு உட்பட்டது திருவெறும்பூர் இந்திரா நகர் . இந்த பகுதியில் வீட்டுமனைகளாக பிரித்தபோது பூங்காவிற்காக பொது இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்த இடத்தில் முஸ்லிம் சமூகத்தினர் மசூதி கட்டுவதற்கு முயன்று வருகின்றனர். இதற்கு பாஜக உட்பட்ட இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பதால் பிரச்சனை இருந்து வருகிறது.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இடத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஒரு நாள் முஸ்லிம் மக்கள் தொழுகை நடத்திக் கொள்வதற்கு திருச்சி ஆர்டிஓ அருள் அனுமதி அளித்து உள்ளதாகவும் அதனால் நீங்கள் யாரும் பிரச்சனை செய்யக்கூடாது என பாஜக மற்றும் இந்து அமைப்பினரை அழைத்து கூறியதற்கு அவர்கள் எதிர்ப்புதெரிவித்ததோடுஅவர்கள் தொழுகை நடத்தினால் நாங்கள் விநாயகரை வைத்து வழிபாடு நடத்துவோம் என கூறியதோடு சம்பவ இடத்தில் பாஜக இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் குவிந்தனர்.
இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழ்நிலைஉருவானது இதனைத் தொடர்ந்து திருச்சி (பொ) ஸ்ரீரங்கம் ஆர்டிஓ தட்சிணாமூர்த்தி தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடந்தது.
அந்த பேச்சு வார்த்தையில் சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் யாரும் தொழுகை நடத்தவோ வழிபாடு செய்யவோ அனுமதி இல்லை அந்த இடம் அளந்து பின்னர் முடிவு செய்யப்படும்.
அதுவரை யாரும் அந்த இடத்தில் எதுவும் செய்யக்கூடாது என்று கூறியதோடு அந்த பகுதியில் உள்ள தனிநபரான முபாரக் என்பவர் இடத்தில் தொழுகை நடத்திக் கொள்வதற்கு தட்சிணாமூர்த்தி அனுமதி அளித்தார்.
இந்த நிலையில் அந்த பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக திருச்சி ஏடிஎஸ் பி குத்தாலிங்கம் தலைமையில் அந்தப் பகுதியில் சுமார் 100 போலீசார் நேற்று முதல் குவிக்கபட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை 6.40 மணியளவில் முபாரக் என்பவரின் இடத்தில் தொழுகை தொடங்கி. 6.55 மணிக்கு தொழுகை முடிந்தது.
இதில் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த சுமார் 90 பேர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் காவல்துறையினருக்கு இனிப்பு வழங்கினர்.
இதனால் அப்பகுதியில் ஏற்பட்டிருந்த பதட்டமான சூழ்நிலை முடிவுக்கு வந்தது.