பாகிஸ்தான் நாட்டில் கடந்த பிப்.8ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு வாக்கு எண்ணிக்கை தொடங்கி 3 நாட்கள் முடிந்த பிறகும் இன்னுமே கூட தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், முதற்கட்ட முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது இம்ரான் கான் கட்சியே முன்னிலையில் உள்ளது. இந்த முறை அங்கே மும்முனை போட்டி நிலவிய நிலையில், அதில் இம்ரான் கான் கட்சிக்கு மட்டும் பல சிக்கல்கள் இருந்தன. குறிப்பாக இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவரால் பிரச்சாரத்தில் நேரடியாகக் கலந்து கொள்ள முடியவில்லை. அப்படி இருந்தும் அவரது கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இதற்கான காரணம் உலகமே அலறும் ஏஐ மற்றும் டீப் பேக் தொழில்நுட்பங்கள் என்கின்றனர் பாகிஸ்தான் அரசியல் பிரமுகர்கள். பிரச்சார காலத்தில் இம்ரான் கானின் டீப் பேக் வீடியோக்கள் இணையத்தில் உலா வரத் தொடங்கின. அதிலும் குறிப்பாக சிறையில் இருந்த நிலையில், தனது கட்சி ஆதரவு பெற்றவர்களுக்கு வாக்களிக்குமாறு இம்ரான் கான் பேசுவது போன்ற வீடியோக்கள் அந்நாட்டின் சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது. அப்படியே தத்ரூபமாக அவர் பேசுவது போன்ற வீடியோக்கள் பரவின. சிறையில் இருக்கும் இம்ரான் கானை திரையில் கொண்டு வந்த மக்களை நம்ப வைத்துள்ளனர். அதாவது இதைத் தேர்தல் ஆயுதமாகவே அவர்கள் பயன்படுத்தியுள்ளனர் என குற்றஞ்சாட்டுகின்றனர் பாகிஸ்தான் எதிர்கட்சியினர்…