துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதிகளில் கடந்த 6-ந்தேதி அதிகாலை வரலாறு காணாத அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இரு நாடுகளிலும் மொத்த உயிரிழப்பு 45 ஆயிரம் எட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. துருக்கிக்கு தொடக்கத்தில் இருந்து இந்தியா, மருத்துவ பொருட்கள், குளிர்கால போர்வை, விரிப்பு உள்ளிட்ட பல்வேறு நிலநடுக்க நிவாரண பொருட்களை விமானங்களில் தொடர்ந்து அனுப்பி வருகிறது. வேறு சில நாடுகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளன. இந்நிலையில், பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட ஜி.என்.என். என்ற செய்தி சேனலில், அந்நாட்டை சேர்ந்த பத்திரிகையாளர் ஷாகித் மசூத் என்பவர் கூறும்போது, துருக்கிக்கு சமீபத்தில் சென்றடைந்த நிலநடுக்க நிவாரண உதவியானது, பாகிஸ்தானுக்கு கடந்த ஆண்டு வெள்ளத்தின்போது துருக்கி சார்பில் அனுப்பி வைக்கப்பட்டவை என அதிரடி தகவலை வெளியிட்டு உள்ளார்.
துருக்கி அனுப்பிய வெள்ள நிவாரண பொருட்களை, பாகிஸ்தான் என்ற பெயரிலான ஸ்டிக்கர் ஒட்டி துருக்கிக்கே நிலநடுக்க நிவாரண பொருட்கள் என திரும்ப அனுப்பி உள்ளது என அவர் கூறியுள்ளார்.இது பாகிஸ்தானுக்கு ஒரு பெரிய அவப்பெயரை ஏற்படுத்தி விட்டது. ஏனெனில், நிலநடுக்கம் பாதித்த துருக்கியின் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறார்.
துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, தொடக்கத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் வழங்குவதற்காக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், துருக்கி நாட்டின் அங்காரா நகருக்கு செல்ல இருக்கிறார். நிலநடுக்கம் பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார் என பாகிஸ்தானின் தகவல் மந்திரி மரியும் அவுரங்கசீப் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டது. நட்பு நாட்டிற்கு பாகிஸ்தான் உதவி கரம் நீட்ட முன்வந்தும் அதனை வரவேற்க துருக்கி தயாராகாத சூழலில், தற்போது இதுபோன்ற செய்திகள் வெளிவந்து உள்ளன. இதனால், துருக்கியை பாகிஸ்தான் ஏதோ ஒரு வகையில் பழிதீர்த்து கொண்டதா? என்றும் அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது. இது உலக நாடுகளில் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.