Skip to content

சாம்பியன்ஸ் டிராபி.. நியூசிலாந்திடம் பாகிஸ்தான் சரண்டர்..

  • by Authour

பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறும் ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகள் நேற்று துவங்கின. கராச்சியில் நடந்த முதல் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டகாரர்களான கான்வே (10), வில்லியம்சன் (1), டேரில் மிட்செல் (10) ஏமாற்றினர். பின் இணைந்த வில் யங், டாம் லதாம் ஜோடி விக்கெட் கைகொடுத்தது. பொறுப்பாக ஆடிய வில் யங், ஒருநாள் போட்டியில் தனது 4வது சதத்தை பதிவு செய்தார். நான்காவது விக்கெட்டுக்கு 118 ரன் சேர்த்த போது நசீம் ஷா பந்தில் வில் யங் (107) அவுட்டானார். மறுமுனையில் அசத்திய லதாம், ஒருநாள் போட்டியில் தனது 8வது சதத்தை எட்டினார். அபாரமாக ஆடிய பிலிப்ஸ், 34 பந்தில் அரைசதம் விளாசினார். இவர், 39 பந்தில், 4 சிக்சர், 3 பவுண்டரி உட்பட 61 ரன் எடுத்து அவுட்டானார். இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 320 ரன் எடுத்தது. லதாம் (118*) அவுட்டாகாமல் இருந்தார். பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா, ஹாரிஸ் ராப் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இமாலய இலக்கை நோக்கி பேட்டிங் துவக்கிய பாகிஸ்தான் அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருந்தது. சவுத் ஷகீல் (6), கேப்டன் முகமது ரிஸ்வான் (3) ஏமாற்றினர். பகார் ஜமான் (24), சல்மான் ஆகா (42) ஓரளவு கைகொடுத்தனர். பொறுப்பாக ஆடிய பாபர் ஆசம் (64), குஷ்தில் ஷா (69) அரைசதம் கடந்தனர். ஷகீன் ஷா அப்ரிதி (14), நசீம் ஷா (13), ஹாரிஸ் ராப் (19) நிலைக்கவில்லை. பாகிஸ்தான் அணி 47.2 ஓவரில் 260 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’டாகி தோல்வியடைந்தது. நியூசிலாந்து சார்பில் ஓரூர்கே, சான்ட்னர் தலா 3, மாட் ஹென்றி 2 விக்கெட் சாய்த்தனர். ஆட்ட நாயகன் விருதை நியூசிலாந்தின் டாம் லதாம் வென்றார்.

error: Content is protected !!