ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நேற்று உலககோப்பை 8 வது போட்டியில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்தது இலங்கை. குசால் மெண்டிஸ், 77 பந்துகளில் 122 ரன்கள் எடுத்தார். சதீரா சமரவிக்ரமா, 99 பந்துகளில் 108 ரன்கள் எடுத்தார். பதும் நிசங்கா, 51 ரன்கள் எடுத்தார். 345 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் அணி விரட்டியது.
இமாம்-உல்-ஹக் மற்றும் பாபர் அஸம் என இருவரும் விரைந்து ஆட்டமிழந்தனர். 37 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து பாகிஸ்தான் அணி தடுமாறியது. இக்கட்டான அந்த நேரத்தில் அப்துல்லா ஷஃபீக் மற்றும் முகமது ரிஸ்வான் இணைந்து 176 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அப்துல்லா ஷஃபீக், 103 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து வெளியேறினார்.பின்னர் வந்த ஷகீல் உடன் இணைந்து 95 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் ரிஸ்வான். ஷகீல், 31 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து பேட் செய்ய வந்த இஃப்திகார் உடன் 37 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் ரிஸ்வான். 121 பந்துகளில் 131 ரன்கள் எடுத்த ரிஸ்வான், இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 8 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். 48.2 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 345 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது.