அரியலூர் மாவட்டம் அருள்மிகு ஒப்பில்லாத அம்மன் திருக்கோவிலில் 83 வருடங்களுக்குப் பிறகு இன்று தேரோட்டத்திற்கான வெள்ளோட்டம் நடைபெற்றது. 1942 ம் வருடத்திற்கு பிறகு அரியலூர் ஜமீன்தார் பட்டமேற்ற துரை விஜய
ஒப்பில்லாத மழவராய நயினார், கோவில் குலதெய்வ மக்கள் மற்றும் பக்தர்களின் முயற்சியால் புதியதாக திருத்தேர் செய்யப்பட்டுள்ளது. இத்தேரின் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது. கோவில் ஆதின பரம்பரை தர்மகர்த்தா கே ஆர் துரை திருத்தேர் வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தார். அதைத்தொடர்ந்து நான்கு மாட வீதிகளில் திருத்தேரை பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
இத்தேரோட்டத்தில் 10 கிலோ எடையுள்ள தேரின் முட்டுக்கட்டையை அச்சமில்லாமல் கையாண்டு தேரின் ஓட்டத்திற்கு ஈடு கொடுத்து ஓடி தேரை நிறுத்தியும் மீண்டும் தேர் ஓட்டத்தை நடத்தியும் வளைவுகளில் தேரை திருப்பும் முயற்சியிலும் பங்கெடுத்த ஒரு மாணவியின் மகத்தான பங்கெடுப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து ஆச்சரியப்படவைத்தது.
50 டன் எடையுள்ள இரும்பு சக்கரங்களால் ஆன ஒரு தேர் கோவிலின் நிலையில் இருந்து புறப்பட்டு நான்கு மாட வீதிகளில் வீதியுலா வந்து திரும்பவும் நிலைக்கு வந்து நிறுத்தும் வரை தேரோட்டத்தை நடத்தி தருவதில் பெரும்பங்கு வகிப்பவர்கள் தேருக்கு முட்டுக்கட்டை போட்டு அதனை வழிநடத்துபவர்கள்.
இதை செய்வதற்கு உடல் வலிமையும் மனவலிமையும் அதிகம் வேண்டும். பல இடங்களில் தேர்கள் சாய்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவதும் மற்றும் உடலுறுப்புகள் சேதம் அடைவதும் நடைபெறுவது உண்டு. இது போன்ற விபத்துக்கள் ஏற்படாமல் தேரை பாதுகாப்பாக வழிநடத்துபவர்கள் இத்தேருக்கு முட்டு கட்டை போடும் ஆண்கள் .
கும்பகோணத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் குடும்பம் நான்காவது தலைமுறையாக இந்த தொழிலை இறைப் பணியாக செய்து வருகிறது. தற்போது ஐந்தாம் தலைமுறையாக அவரது மகன் புருஷோத்தமன் கோவில் கட்டிடக்கலையில் பொறியியல் பட்டம் முடித்து இத்தொழிலை செய்து வருகிறார். அவரது மகளான பதினொன்றாம் வகுப்பு முடித்துள்ள பத்மாவதியும் ஆர்வத்தின் காரணமாக தனது தந்தை ரமேஷ் மற்றும் அண்ணன் புருஷோத்தமன் ஆகியோரிடம் இந்த தொழில்நுட்பத்தை கற்று கடந்த இரண்டு வருடங்களாக தேருக்கு முட்டுக்கட்டை போடும் பணியினை செய்து வருகிறார்.
தேரின் உயரத்தில் இருந்து தொங்கும் கயிற்றை ஒரு கையில் பிடித்தவாறு பத்மாவதி, தேரின் ஓட்டத்திற்கு ஈடு கொடுத்து தானும் ஓடி, பத்து கிலோ எடையுள்ள முட்டுக்கட்டைகளை கைகளில் ஏந்தி தேருக்கு அடியில் அச்சம் இல்லாமல் கட்டைகளை நிறுத்தி தேரை பாதுகாப்பாக வழி நடத்துவதில் பத்மாவதியின் பங்கு அளப்பரியது.
உடல் வலிமை உள்ள ஆண்களே அச்சப்பட்டு தேருக்கு அருகில் செல்லாமல் விலகி செல்லும் வேளையில், பத்மாவதி தேருக்கு மிக அருகில் ஓடி ஓடி சென்று அச்சுக்கட்டையான முட்டுக்கட்டையை போட்டுச் செல்லும் இப் பெண்ணின் மனதைரியம் மிகுந்த பாராட்டுக்கு உரியது.
கும்பகோணத்தில் வசிக்கும் ரமேஷின் மகளான பத்மாவதி, பிளஸ் ஒன் படிப்பை முடித்து, பிளஸ் டூ படிப்பிற்கு செல்லுகிறார். கோவில் கட்டிடக்கலையில் பொறியாளராகி இறைப் பணியை தொடர வேண்டும், இதே போல தேருக்கு கோபுரம் கட்டுவது, தேருக்கு முட்டுக்கட்டை போடுவது ஆகிய பணிகளை தனது தலைமுறைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார் பத்மாவதி.
உடல் வலிமை உள்ள 10 ஆண்களுக்கு மத்தியில், 50 டன் எடையுள்ள தேருக்கு அசராமல் முட்டுக்கட்டை போட்டுச் செல்லும் பத்மாவதியின் மன வலிமை ஓராயிரம் ஆண்களுக்கு சமமானது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி தேரை இழுத்துச் செல்லும் வைபவத்தில் தனித்து சிங்க பெண்ணாக தனது வலிமையை நிரூபித்து வரும் பத்மாவதி போன்ற பெண்களே வலிமையான தமிழகத்தின் அச்சாணி தூண்களாகும்.
தமிழகத்திலேயே உயரமான கும்பகோணம் சக்கரபாணி கோவிலின் 105 அடி உயர தேர் மற்றும் கோபுர கட்டமைப்பு மற்றும் தேரோட்டத்தை தொடர்ந்து நடத்தி வரும் ரமேஷ் குடும்பத்தாரின் அடுத்த தலைமுறை வாரிசுகளான புருஷோத்தமன் மற்றும் பத்மாவதி ஆகியோரின் இந்தப் பணி பல தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக தொடரும் என்கின்றனர் இக் குடும்பத்தினர்.
ஆணுக்கு நிகராக செயலாற்றும் பத்மாவதி அனைவரும் பாராட்டும் பெண்ணாக உயர்ந்து நிற்கிறார்.