மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டுக்கான விருதுகளை பெறுபவர்களின் பட்டியல் குடியரசு தினத்தை ஒட்டி நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி பத்ம விபூஷண் விருது ஏழு பேருக்கும், பத்ம பூஷண் விருது 19 பேருக்கும், பத்ம ஸ்ரீ விருது 113 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு பத்ம பூஷணும், 10 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல வயலின் இசைக்கலைஞர் எல்.சுப்பிரமணியனுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மறைந்த பிரபல மலையாள இயக்குநர் எம்.டி.வாசுதேவன் நாயர், ஜப்பானைச் சேர்ந்த சுஷிகி மோட்டார் நிறுவனர் ஒசாமு சுஷிகி மற்றும் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹர் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் நல்லி குப்புசாமி, நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா உள்ளிட்டோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல, பிரபல தெலுங்கு நடிகரும் தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏவுமான நந்தமுரி பாலகிருஷ்ணா, பீகார் முன்னாள் துணை முதல்வர் மறைந்த சுஷில் குமார் மோடி, மறைந்த மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி, உபியை சேர்ந்த பெண் துறவி சாத்வி ரிதம்பரா, இந்திய ஹாக்கி அணி முன்னாள் கோல்கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ், மறைந்த கஸல் இசைக்கலைஞர் பங்கஜ் உதாஸ், பாலிவுட் இயக்குநர் சேகர் கபூர் ஆகியோருக்கும் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், மிருதங்க வித்வான் குருவாயூர் துரை, சமையல் கலைஞர் கே.தாமோதரன், ஊடகத்துறையை சேர்ந்த தினமலர் லட்சுமிபதி ராமசுப்பையர், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஆர்.அஸ்வின், தெருக்கூத்து கலைஞர் புரிசை கண்ணப்ப சம்பந்தன், பேராசிரியர் எம்.டி.ஸ்ரீனிவாஸ், தொழிலதிபர் ஆர்.ஜி.சந்திரமோகன், சிற்பக் கலைஞர் ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, எழுத்தாளர் சீனி விஸ்வநாதன் மற்றும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்த பறை இசைக்கலைஞர் வேலு ஆசான் ஆகிய தமிழகத்தை சேர்ந்த 11 பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித், அஸ்வின் உட்பட 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு
- by Authour