இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரிணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் திறம் பட செயலாற்றியவர். புற்றுநோய் பாதிப்புக் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே சிகிச்சை பெற்று வந்த அவர் இலங்கையில் நேற்று காலமானார். அவருக்கு (47).
அவரின் மறைவிற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பவதாரிணி மறைவுக்கு நடிகர் வடிவேலு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,” ‘மாரிசன்’ படத்திலிருந்து இரவு ஷூட்டிங் முடிந்து வந்ததுமே இந்த
அதிர்ச்சியான செய்தி என்னை அப்படியே நிலைகுலையச் செய்து விட்டது. அருமை அண்ணன் இசைஞானி அவருடைய தங்க மகள் பவதாரிணி உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு ஒன்னும் புரியல. என்ன ஆச்சு, 47 வயசு பொண்ணு இவ்வளவு சீக்கிரமா கடவுள் கிட்ட போயிடுச்சே என கதறி அழுதுவிட்டேன்.
பவதாரிணி சாதாரண குழந்தை அல்ல. அது ஒரு தெய்வக் குழந்தை. அந்தக் குழந்தையோட குரல் குயில் போல இருக்கும். அவருடைய மறைவு செய்தி கேட்டு உலகத் தமிழர்கள் பூராவுமே இன்னைக்கு ரொம்ப நொறுங்கி இருப்பாங்க.. தைப்பூச நாளில் தங்கை பவதாரிணி உயிரிழந்த நிலையில், அந்த முருகப்பெருமானுடைய காலடியில் போய் தான் அந்த தங்க மகள் ஐக்கியமாகியிருப்பார். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும்.
இளையராஜா அண்ணன் மனம் தைரியமாக இருக்க என்னுடைய குலதெய்வம் அய்யனார், கருப்புசாமி என எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொள்கிறேன். இதுக்கு மேல என்னால பேச முடியலை” என அழுதபடி அவர் சேனல் ஒன்றுக்கு ஆடியோ பேட்டியளித்துள்ளார்.