தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக போலீசார் பங்கேற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை நீதித்துறை நடுவர் அப்துல் கனி நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சாலை விதிகளை பின்பற்றாததாலும், ஹெல்மெட் அணியாததாலும் இந்தியாவில் ஏற்படும் சாலை விபத்துகளில் அதிகளவில் உயிரிழப்புகளும், உடல் ஊனமும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹெல்மெட் அணிய வேண்டும், சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்பதை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவும், காவல்துறையும் இணைந்து ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு பேரணியை நேற்று நடத்தினர். இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவருமான அப்துல் கனி கொடியசைத்து துவக்கி வைத்தார். பாபநாசம் டிஎஸ்பி பூரணி, அரசு வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், கூடுதல் அரசு வழக்கறிஞர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழிப்புணர்வு பேரணியில் பாபநாசம், அம்மாபேட்டை, கபிஸ்தலம் ஆகிய காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார்கள் வழக்கறிஞர்கள் என ஏராளமானோர் பங்கேற்று பாபநாசம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து விபத்தில்லா பயணம், ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் இயக்குவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியபடி சென்றனர்.
இப்பேரணியில் காவல்துறையினர், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், அரசுத்துறை ஊழியர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து பேரணியில் பங்கேற்றவர்களுக்கு காவல்துறை சார்பாக சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவினர் ராஜேஷ்குமார் நிர்வாக உதவியாளர்
தனசேகரன், பாலமுருகன் மற்றும் சட்ட தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.