ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று சரஸ்வதி மகால் நூலக ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்குச் சங்கத் தலைவர் பாஸ்கரன், செயலர் அஞ்சையன் அனுப்பிய மனுவில் கூறியதாவது:
பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் சரசுவதி மகால் நூலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சுமார் 40 பேர் தொடர்ந்து ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இந்நூலகத்தின் இயக்குநராக மாவட்ட ஆட்சியர் செயல்படுகிறார்.
கடந்த பல மாதங்களாக ஒவ்வொரு மாதமும் கடைசி வேலை நாளில் வழங்க வேண்டிய ஓய்வூதியத்தை பல நாட்கள் தள்ளி வைத்து வழங்கி வந்தனர். கடந்த மார்ச் 31 ஆம் தேதி வழங்க வேண்டிய ஓய்வூதியத்தை ஏப்ரல் மாதத்தில் கூட வழங்கவில்லை. மேலும், ஏப்ரல் மாதத்து ஓய்வூதியமும் வழங்கப்படவில்லை.
இதனால், 40 குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, இதுகுறித்து தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.