Skip to content
Home » நம்ம ஸ்கூல்…. திட்டத்தை துவக்கினார்….முதல்வர் ஸ்டாலின்

நம்ம ஸ்கூல்…. திட்டத்தை துவக்கினார்….முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் இயங்கி வரும் சுமார் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேம்படுத்தி, தனியார் பள்ளிகளுக்கு நிகரான பள்ளிகளாக மாற்றும் பணிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அரசின் பங்களிப்பு மட்டும் அல்லாமல் தனியார் பங்களிப்பையும் இணைத்து செயல்பட பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதற்காக ‘நம்ம ஸ்கூல்’ என்ற திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின்படி அரசுப் பள்ளிகளில் படித்து உயர்ந்த நிலைக்கு வந்த மாணவ-மாணவியர், தொழில் அதிபர்களாக உயர்ந்தவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றை இந்த திட்டத்தின் கீழ் இணைத்து அவர்கள் மூலம் சமூகப் பொறுப்புணர்வு நிதி என்னும் சிஎஸ்ஆர் நிதியை கொண்டு அரசுப் பள்ளிகளில் மேம்பாட்டுப் பணிகளை தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய முன்னாள் மாணவர்கள் அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து அந்த பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உள்ளனர். இந்த நிலையில், சென்னை, கிண்டியில் அரசு பள்ளிகளை தத்தெடுக்கும் வகையில் தமிழக அரசின் ‘நம்ம ஸ்கூல்’ திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லாஉஷா, ஆணையர் நந்தகுமார், மற்றும் பள்ளிக் கல்விதுறையை சார்ந்த இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நடிகர் சிவக்குமார் கோவை மாவட்டம் சூலூர் பள்ளியை தத்தெடுத்துள்ளார். இதையொட்டி அவருக்கு  மேடையில் முதல்வர் ஸ்டாலின் நினைவுப்பரிசு வழங்கி  கவுரவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *