பாகுபலியை உருவாக்கிய ராஜமவுலியின் இயக்கத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி வெளியான படம் ஆர். ஆர்.ஆர். இது தெலுங்கில் சுதந்திர போராட்ட காலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவிய படம். இதில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியாபட் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருதை பெற்றது. ஆஸ்கர் விருதுக்கும் இந்த பாடல் பரிந்துரைக்கப்பட்டது. இன்று அதிகாலை ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டது. அனைவரும் எதிர்பார்த்தபடி நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்த விருதை பாடலாசிரியர் சந்திரபோஸ், இசை அமைப்பாளர் கீரவாணி என்கிற மரகதமணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
ஏ.ஆர் ரஹ்மானுக்கு பிறகு ஆஸ்கர் விருதை பெறும் ஒரு இந்திய இசையமைப்பாளர் கீரவாணி என்பது குறிப்பிடத்தக்கது. 2009ல் ஸ்லம் டாக் மில்லியனர் என்ற படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருது பெற்றார். அதன்பிறகு ஒரு இந்திய இசையமைப்பாளர் இப்போது தான் ஆஸ்கர் விருது பெற்றுள்ளார். கீரவாணியும், சந்திரபோசும், பாலசத்தர் தயாரித்த வானமே எல்லை என்ற தமிழ்படத்தில் அறிமுகமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ஜாதிமல்லி உள்பட பல தமிழ் படத்தில் இவர்கள் பணியாற்றி உள்ளனர்.
ஆஸ்கர் விருது பெற்ற கீரவாணிக்கு பிரதமர் மோடி,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து கட்சி தலைவர்கள், திலையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.