கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, தமிழ்நாடு உறுப்பு மாற்று உறுப்பு நியமன ஆணையம் மற்றும் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து, ஒரு லட்சம் உறுப்புதானதாரர்கள் பதிவு செய்வதை இலக்காக கொண்டு ஆன்லைன் உறுப்பு தான டிரைவ் ஒன்றை தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பந்தய சாலை பகுதியில் உறுப்பு தான விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது. இதனை
எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் ஆகியோர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பின்னர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களை சார்ந்த 300க்கும் அதிகமான என்.எஸ்.எஸ். தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
பின்னர் காவல் ஆணையாளர் சரவண சுந்தர் பேசுகையில், உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் இன்று கணிசமாக அதிகரித்து வருவதாக தெரிவித்தார். முன்னர் உணவு தானம் மற்றும் கண் தானம் ஆகியவற்றில் சமூகம் கவனம் செலுத்திய நிலையில், தற்போது உடல் உறுப்பு தானத்திலும்
சமமான கவனம் செலுத்தப்படுகிறது என கூறினார். கோவையில் தானம் செய்யப்பட்ட உறுப்புகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் உள்ள மருத்துவமனைக்கு தடையின்றி கொண்டு செல்வதற்கான பாதைகளை மாநகர காவல் துறை அமைத்துத் தருவதன் மூலம் உடல் உறுப்பு தான முயற்சிகளை ஆதரித்து வருகிறது என அவர் கூறினார். உடல் உறுப்பு தானம் குறித்த பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் தொலைநோக்கு முயற்சிகளுக்கு ஆணையர் வாழ்த்து தெரிவித்தார்.
எஸ்.என்.ஆர். சான்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர். சுந்தர் பேசுகையில், ஒரு ஆரோக்கியமான நபர் இறந்த பிறகு உடல் உறுப்பு தானம் மூலம் எட்டு உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று கூறினார். ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் மற்றும் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து, தன்னார்வ ஆன்லைன் உறுப்பு தான இயக்க பிரச்சாரத்தின் மூலம் இந்த நோக்கத்தை தீவிரமாக ஊக்குவித்து வருவதாக தெரிவித்தார்.