வங்கக் கடலில் நேற்று வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு வந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெறும் என்றும், அது மேலும் வட மேற்கு திசையில் நகர்ந்து தென் மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் டிசம்பர் 2ம் தேதி புயலாக வலுப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் புயலின் பாதை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பிறகு அது வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே டிசம்பர் 5ம் தேதி விஜயவாடா வழியாக கரையைக் கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் புயல் தமிழகத்தின் வழியாக கரையை கடக்கவும் வாய்ப்பு உள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் ஜான் தெரிவித்துள்ளார்.
அதை நிரூபிக்கும் வகையில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை கொட்டி தீர்க்கிறது. இன்றும் மழை பெய்து கொண்டே இருக்கிறது. வட தமிழகத்தில் குறிப்பாக கடற்கரை மாவட்டங்களில் டிசம்பர் 2, 3, 4ம் தேதிகளில் மிக கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. இந்நிலையில், வட தமிழகப் பகுதிகளான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
நாளை (01-12-2023) கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், தாழ்வு மண்டலம் தொடர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நீடிக்கும் என்பதால், நாளை மறுதினமும் (02-12-2023), அதற்கு அடுத்த நாளும் (03-12-2023) சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்த பகுதிகளுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
எனவே இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் பல இடங்களில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
சென்னையில் இன்று மழை பாதித்த பகுதிகளை அமைச்சர்கள் மாசு, சேகர்பாபு, ஆகியோர் ஆய்வு செய்தனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மாநகராட்சி கட்டிடத்தில் உள்ள மழை பாதிப்பு கட்டுப்பாட்டு அறைக்கு வந்து நிலவரங்களை ஆய்வு செய்தார். அங்கு வந்த போன்கால்களில் முதல்வரே பேசி மக்கள் குறைகளை கேட்டார். உடனுக்குடன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணபணி ஊழியர்களை அனுப்பி வைத்தார்.
2ம் தேதிக்கு பிறகு கனமழை கொட்டும் என்பதால் சுமார் 16 மாவட்டங்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை முன்னெச்சரிக்கையாக சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனடியாக செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.