கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை தீவிரபடுத்த வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்து இன்று தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. தேனியில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சையில் வைத்திலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கரூர் தலைமை தபால் நிலையம் முன்பும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ரமேஷ், தங்கவேல் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த நிகழ்ச்சிக்காக கடந்த சில தினங்களுக்கு முன் கரூர் மாநகரில் விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில் அதிமுக கொடி, இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக என்ற பெயர் இடம் பெற்று இருந்தது. நீதிமன்ற உத்தரவை மீறி அதிமுக பெயர் மற்றும் கட்சியின் கொடி பயன்படுத்தப்படுவதாக கரூர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.
மாவட்ட அதிமுக எதிர்ப்பை மீறி ஆர்பாட்டத்திற்காக வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனரில் அதிமுகவின் சின்னம் மற்றும் கட்சியின் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுக கட்சி கொடியை கையில் பிடித்தபடி கலந்து கொண்டுள்ளனர். மேலும், கரூர் மாநகரம் முழுவதும் அதிமுக கொடி கம்பம், அமமுக கொடிக்கம்பத்துடன் இணைந்து பறக்கிறது. இந்த காட்சிகளை பார்க்கும்போது கரூரில் அதிமுகவும், அமமுக-வும் இணைந்ததை போல் இருந்ததாக மக்கள் தெரிவித்தனர்.