சென்னையில் தனியார் ஹோட்டலில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது ஆதராவளர்கள் மத்தியில் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:- அதிமுகவின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களை நீக்க, தொண்டர்களுக்குத்தான் அதிகாரம்; மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு இல்லை என்றே கட்சியின் அடிப்படை விதிகளை எம்.ஜி.ஆர். வகுத்தார். அதிமுகவின் இந்த நிலைக்கு யார் காரணம் என்று உங்களுக்கு தெரியும்; அவரது பெயரை நான் உச்சரிக்க மாட்டேன்.
தன் இரும்பு பிடிக்குள் கட்சியை வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் நடத்திய நாடகம் தோல்வியில் முடிந்தது. 2026 வரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்காலம் உள்ளது; தேர்தல் ஆணையத்திலும் இந்த ஆவணங்கள்தான் உள்ளன. எம்ஜி.ஆர்., ஜெயலலிதா கட்டிக்காத அதிமுகவின் சட்ட விதிகளை காப்பாற்ற தற்போது தர்ம யுத்தம் நடக்கிறது. எந்த அளவுக்கு அதிமுகவின் சட்டவிதிகளை சிதைக்க முடியுமோ, அந்த அளவுக்கு சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில் சட்ட விதிகளை சிதைத்தனர்.
சர்வாதிகாரத்தின் உச்ச நிலைக்கு சென்று 23 தீர்மானங்களும் ரத்து செய்யப்படும் என அறிவித்தனர். நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு மேலாக, மக்களின் தீர்ப்பு என ஒன்று இருக்கிறது, கூடிய சீக்கிரம் அது வரும். நாம் தர்மத்தின் பக்கம், நியாயத்தின் பக்கம் சென்றுகொண்டிருக்கிறோம். எதற்கும் அஞ்சாமல் துணிந்து நில்லுங்கள்; முன்வரிசையில் நாங்கள் நின்று, எதிர்வரும் கணைகளை தாங்கி உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்போம். தேர்தல் முடிவு வெளியாகும் போது அனைத்தும் தெரியவரும் என்றார்.