நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரும் சேர்ந்து உள்ளனர். இவர்களுக்கு ஒன்று அல்லது 2 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என தெரிகிறது. தினகரனுக்கு தேனியும், ஓபிஎஸ்சுக்கு சிவகங்கை, அல்லது ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்படலாம், அதில் அவரது மகனை போட்டியிட வைக்கலாம் என தெரிகிறது.
எடப்பாடியை எதிர்க்க வேண்டும் அதன் மூலம் அரசியலில் தனி இடம் பிடிக்க வேண்டும். இதற்கு பாஜக நமக்கு உதவும் என்ற எண்ணத்தில் ஓபிஎஸ் பாஜக கூட்டணியில் சேர்ந்தார். ஆனால் பாஜக ஓபிஎஸ்சுக்கு அரசியல் ரீதியாக எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை. எப்படியாவது இரட்டை இலை சின்னத்தை தனக்கு பெற்று தந்துவிடவேண்டும் என பாஜகவிடம் கோரிக்கை வைத்து பார்த்தார். அத்துடன் கோர்ட்டையும் நாடினார். இரண்டிலும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.
இன்று சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பிலும் ஓபிஎஸ் அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இது ஓபிஎஸ்சுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. எனவே புதிய கட்சி தொடங்கினாலும் தமிழகத்தில் போணியாகாது. எனவே அடுத்த அரசியல் மூவ் என்ன செய்யலாம் என யோசித்தார்.
இப்படியே போனால் தமிழகத்தில் இன்னும் சில வருடங்களில் தன்னை யாருக்கும் நினைவிருக்காது. எனவே என்ன செய்யலாம் என ஓபி்எஸ் தனது சகாக்களிடம் கருத்து கேட்டாராம். அதில் பாஜகவில் இணைந்து விடலாமா என்பது குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது. பாஜக மேலிட தலைமை, ஓபிஎஸ்சை பாஜகவி்ல் இணைந்து விடும்படி தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறதாம். இது குறித்தும் கருத்து கேட்டு உள்ளார். அதற்கு பெரும்பாலானவர்கள் சம்மதிக்கவில்லை. அதே நேரத்தில் ஓபிஎஸ்சுக்கு மட்டும் பாஜகவில் இணைய ஆர்வம் இருப்பதாக கூறப்படுகிறது.
நாளை பிரதமர் மோடி சேலம் பிரசார கூட்டத்தில் பேசுகிறார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி டாக்டர் ராமதாஸ், ஓபிஎஸ் ஆகியோருக்கும் அழைப்பு வந்ததாம். அந்த அழைப்பை ஏற்று, பாஜகவில் இணைந்து விடலாம் என ஓபிஎஸ் முடிவு செய்துள்ளாராம். எனவே நாளைய சேலம் கூட்டத்தில் பிரதமர் மோடி முன்னிலையில் ஓபிஎஸ் பாஜகவில் இணையலாம், அதற்கான வாய்ப்பு இருக்கிறது, இதற்காகத்தான் ஓபிஎஸ் இன்று திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் என ஓபிஎஸ்சுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
ஏற்கனவே கூட்டணி பேச்சுவார்த்தைக்கு போன சரத்குமார் தனது கட்சியை பாஜகவில் ஐக்கியமாக்கி விட்டார். கட்சி வைத்திருந்தவரே ஐக்கியமான நிலையில் கட்சி இல்லாத நமக்கு இதை விட்டால் வேறு வழியில்லை என்றும் ஓபிஎஸ் கருதுகிறாராம்.