திருச்சியில் நாளை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் பொதுக்கூட்டம் நடத்துகின்றனர். இதற்காக பொன்மலை ஜி கார்னர் ரயில்வே மைதானத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த மைதானத்தை சுற்றி கொடிகள் நடப்பட்டுள்ளன. அந்த கொடிகள் கறுப்பு, சிகப்பு நிறத்தில், நடுவே அண்ணாதுரை மற்றும் இரட்டை இலை சின்னம் இருப்பது போல் உள்ளது. இது அ.தி.மு.க.வை ஞாபகப்படுத்தும் கொடி என்றாலும், தேர்தல் கமிஷனால் அ.தி.மு.க.வுக்கு அங்கீகரிக்கப்பட்ட கொடி அல்ல. அங்கீகரிக்கப்பட்ட கொடி என்பது, கறுப்பு, சிகப்பு நிறுத்தில், கொடியின் நடுவே அண்ணாதுரை படம் இருக்கும். மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பயன்படுத்தும் கொடி, அ.தி.மு.க., கொடி போல் தோற்றம் இருந்தாலும், அதிகாரப்பூர்வ அ.தி.மு.க.வின் கொடி என்று கூறமுடியாது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அ.தி.மு.க. கொடியை பயன்படுத்தினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அ.தி.மு.க.வினர் எச்சரிக்கை விடுத்துள்ளதால், அங்கீகரிக்கப்பட்ட கொடியை பயன்படுத்தாமல், அதேநேரம் அ.தி.மு.க. கொடி என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் இரட்டை இலை சின்னத்துடன் கூடிய கொடியை ஒபிஎஸ் தரப்பு பயன்படுத்துவதாக கூறப்பட்டது. மேலும் எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்சினை வந்தால், நாங்கள் அ.தி.மு.க.வின் அங்கீகரிக்கப்பட்ட கொடியை பயன்படுத்தவில்லை என்று கூறுவதற்காக இப்படி செய்கிறார்கள் என்று அ.தி.மு.க.வினர் குற்றம்சாட்டுகின்றனர்.. அதேபோல் சில இடங்களில் அதிமுக கொடியை உள்ளே வைத்து தைத்தது போல் ஒரு கொடியையும் ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்தி வருகிறது..