சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நியமிப்பது தொடர்பாகவும், இருக்கை விவகாரம் தொடர்பாகவும் அதிமுக தலைமைக் கொறடா எஸ்.பி.வேலுமணி இன்று சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்தார். எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க ஏற்கெனவே பழனிசாமி தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாமலேயே இருந்தது. இந்நிலையில், நேற்று (மார்ச் 28) அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி பதவியேற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நியமிப்பது தொடர்பாக அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி சபாநாயகர் அப்பாவுவை சந்தித்தார். அதேபோல் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை பற்றியும் ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டப்பேரவையில் இப்போது இபிஎஸ் அருகில் உள்ள இருக்கையில் தான் ஓபிஎஸ் அமர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.