அதிமுகவின் 53வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நெல்லை மாவட்டம் அம்பையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: கடந்த 1972ல் எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் இன்று 53வது ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. எம்ஜிஆர் ஆட்சிக்கு வருவதற்கு முன் பல்வேறு சோதனைகளை சந்தித்தார். அதேபோல் ஜெயலலிதாவும் பல இன்னல்களை சந்தித்தார். அந்த இரு தலைவர்களும் அனைத்து சோதனைகளையும் முறியடித்து ஆட்சிக்கு வந்தார்கள். இதேபோல்தான் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராக பொறுப்பேற்றேன். ஆனால் கட்சிக்குள்ளேயே இருக்கும் சில எட்டப்பர்கள்(ஓபிஎஸ்) சதி திட்டங்களை தீட்டி எனது ஆட்சியை அகற்ற வேண்டும் என நினைத்தார்கள்.
அப்படிப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்து உயர்ந்த பதவிகளை கொடுத்தேன். ஆனால் அவர்கள் இந்த ஆட்சிக்கு எதிராக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காக சட்டமன்றத்தில் எதிர்த்து ஓட்டு போட்டார்கள். ஆனால் இன்று அதிமுக வலுவோடு இருக்கிறது. அது இரண்டாக மூன்றாக உடைந்து விட்டது என்று சிலர் வதந்தியை கிளப்புகிறார்கள். அதிமுகவை பலவீனப்படுத்துவதற்காகவும் நான் முதலமைச்சராவதை தடுப்பதற்காகவும் அந்த எட்டப்பர்கள் தொடர்ந்து சதித் திட்டம் தீட்டுகிறார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு எதிராக என்ன செய்தார்களோ அதேபாணியில் இப்போதும் இடையூறு செய்கிறார்கள்.
அதிமுக வலிமை குறைந்துவிட்டது என்று ஒரு சில ஊடகங்கள் மதிப்பிடுகிறது. ஆனால் 2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலைவிட 2024ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக ஒரு சதவீதம் ஓட்டுகள் கூடுதலாக பெற்றுள்ளது. அதிமுகவுக்கு செல்வாக்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நாம் சொந்த காலில் நிற்கிறோம், நமக்கு தான் பலம் அதிகம். எனவே வருகிற 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நாம் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு தொண்டர்கள், நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.