அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் தொடர்ந்து ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், வரும் 24 ம் தேதி திருச்சியில் ஓபிஎஸ் அணி சார்பில் முப்பெரும் விழா மாநாடு நடைபெற உள்ளது. மாலை 5 மணிக்கு தொடங்கும் மாநாடு இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது. திருச்சி மாநாடு தொடர்பாக கடந்த 10 ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனையடுத்து திருச்சி
பொன்மலையில் உள்ள ஜி கார்னர் மைதானத்தில் மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இன்று (ஏப்ரல் 20) பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் வெல்லமண்டி நடராஜன், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.இந்த திருச்சி மாநாடு ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒரு புது அத்தியாயம் என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் அதிமுகவில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட உள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் பேசிவருகின்றனர்.